சென்னை: தமிழகத்தில் அதிக திரையரங்குகள் கிடைப்பதில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நவம்பர் 14-ம் தேதி சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இப்படத்தினை அபினேஷ் இளங்கோவன் தமிழகத்தில் வெளியிடுகிறார். இப்போது தான் விநியோக உரிமைகள் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகின்றன. வட ஆற்காடு, தென் ஆற்காடு, மதுரை ஏரியா உரிமைகளை சீனு கைப்பற்றி இருக்கிறார். ஆனால், ‘கங்குவா’ படத்துக்கு அதிக திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு இரண்டு காரணங்களை கூறுகிறார்கள் விநியோகஸ்தர்கள். முதல் காரணமாக இருப்பது ‘அமரன்’ வெற்றி தான். முதல் வாரத்துக்கு நிகராக இரண்டாம் வாரத்திலும் ‘அமரன்’ வசூல் அதிகமாக இருக்கிறது. இதனால் கண்டிப்பாக சில திரையரங்க உரிமையாளர்கள் படத்தை தூக்க முடியாது என்று கூறிவிட்டார்கள்.
மேலும், 3-ம் வாரம் என்னும் போது பங்கு தொகை திரையரங்க உரிமையாளர்களுக்கு அதிகமாக கிடைக்கும் என்பது தான் முக்கியமான காரணம். மற்றொரு காரணம் படக்குழுவினர் எதிர்நோக்கும் பங்குத்தொகை. முதல் வார வசூலில் 75% - 25% என்கிறது படக்குழு. இதற்கு பல்வேறு விநியோகஸ்தர்கள் மறுப்பு தெரிவிக்கிறார்கள். முதல் வார வசூலில் இவ்வளவு பங்கை தயாரிப்பாளர்கள் எதிர்பார்ப்பதை விநியோகஸ்தர்கள் எதிர்பார்க்கவில்லை.
இதனால் பல்வேறு ஏரியாக்களில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இதே போன்றதொரு பிரச்சினையில் தான் விஜய்யின் ‘தி கோட்’ படமும் சிக்கியது. இதனால் இறுதிக்கட்டத்தில் தான் படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கியது நினைவுக் கூரத்தக்கது. பங்குத் தொகை பிரச்சினையாவது பேசி முடிக்கப்படலாம். ஆனால், ‘அமரன்’ பிரம்மாண்ட வெற்றியால் கண்டிப்பாக 100 திரையரங்குகள் வரை குறைவாக தான் கிடைக்கும் என்பது மட்டும் உறுதி.