சென்னை: “முதல் தோல்வியை உணர்ந்தபோது, நான் சற்று நிம்மதி அடைந்தேன்” என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மும்பையில் ‘அமரன்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவருமே படங்களின் தோல்வி குறித்து பேசினார்கள். தோல்வி குறித்து சிவகார்த்திகேயன், “ரசிகர்கள் ஹிட் படங்களை நினைவில் வைத்திருப்பார்கள். ஆனால், வெறுப்பவர்கள் தோல்வி படங்களை நினைவில் வைத்திருப்பார்கள். சில சமயங்களில் வெறுப்பவர்களையும் சந்தோஷமாக்க வேண்டும்.
என்னுடைய முதல் தோல்வியை அடையும் வரை, ஒவ்வொரு படத்துக்கும் எனக்கு அந்த பயம் இருந்தது. ஆனா அதிர்ஷ்டவசமாகவோ அல்லது மக்களின் அன்பு காரணமாகவோ முதல் ஏழு அல்லது எட்டு படங்கள் நன்றாகவே சென்றன. எனவே முதல் தோல்வியை எதிர்கொண்டபோது, இப்படித்தான் ஒரு தோல்வி இருக்கும் என்பதை உணர்ந்து நான் சற்று நிம்மதி அடைந்தேன். தோல்வி குறித்து கவலைப்படாமல் இருப்பதே முதல் அணுகுமுறை. முதலில் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். சரி, நாம் சரியாக செய்யவில்லை, நாம் தவறான முடிவை எடுத்துவிட்டோம்.
இதற்கு நாம் தான் பொறுப்பு, இது இயக்குநரின் தவறோ வேறு எதுவோ இல்லை. நாம் கதையை கேட்டுவிட்டுத்தான் அதற்கு ஒப்புக் கொண்டோம். இப்போது என்ன தவறு என்று புரிந்து கொண்டு அதே தவறை மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும். அது நடக்கத்தான் செய்யும். அப்படித்தான் நாம் பரிணமிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அமரன்’. சோனி நிறுவன, கமல்ஹாசன், மகேந்திரன் உள்ளிட்டோர் இணைந்து தயாரித்துள்ள இப்படம் அனைத்து மொழிகளிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகளாவிய வசூலில் ரூ.200 கோடியை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.