‘கங்குவா’ படத்தின் கதைகளம் குறித்து முதன்முறையாக சூர்யா பகிர்ந்துள்ளார்.
‘கங்குவா’ படத்தை விளம்பரப்படுத்த கொச்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அப்போது ‘கங்குவா’ களம் குறித்து சூர்யா, “ ’கங்குவா’ படத்துக்காக 700 ஆண்டுகள் பின்னோக்கி சென்றிருக்கிறோம். இப்படத்தில் 4 தீவுகளைச் சுற்றி கதை இருக்கும். அதில் ‘கங்குவா’வின் கடவுள் தீ. ஒரு தீவில் இருப்பவர்களின் கடவுள் தண்ணீர். இன்னொரு தீவுக்கு ரத்தம் என இருக்கும்.
அவர்களுக்குள் நடக்கும் கருத்து வேறுபாடு, பேராசை கொள்ளுதல் மற்றும் நெறிமுறைகள் மாற்றினால் என்னவாகும் என்பதே ‘கங்குவா’ கதைக்களம். சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக இருந்தாலும், அதற்கு பின்னால் நல்ல எமோஷன் காட்சிகளும் இருக்கும். அன்பின் தூய்மையான வடிவம் மன்னிப்பு தான் என்று நம்புகிறேன். அதைச் சுற்றி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
நவம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘கங்குவா’. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதற்கான இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.