தமிழ் சினிமா

யாரிடமும் இல்லாத வசீகரம் அஜித்திடம் உள்ளது: ரெஜினா

ஸ்டார்க்கர்

யாரிடமும் இல்லாத வசீகரம் அஜித்திடம் இருப்பதாக ரெஜினா அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

‘விடாமுயற்சி’ குறித்து முதன்முறையாக பேசியிருக்கிறார் ரெஜினா. அவர் அளித்த பேட்டியொன்றில் “’விடாமுயற்சி’ திரைப்படம் மிகவும் நன்றாக வந்து இருக்கிறது. அதன் 90% படப்பிடிப்பை அஜர்பைஜானில் படமாக்கி இருக்கிறோம். அப்படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். ஏனென்றால் என் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. அவ்வளவு பெரிய படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் வழங்கி தயாரிப்பாளர்கள் என் மீதான நம்பிக்கையைக் காட்டியிருக்கிறார்கள். ஆகையால் உற்சாகமாக இருக்கிறேன்.

‘விடாமுயற்சி’ படத்துக்கு முன்பு அஜித் சாரை தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் படப்பிடிப்பு முடிந்த பிறகு அந்த மனிதரை அனைவரும் சந்திக்க வேண்டும் என்று கூறுவேன். இன்று வரை நான் பார்த்த யாருக்கும் இல்லாத வசீகரமும், கவர்ச்சியும் அவரிடம் உள்ளது. உண்மையில் படம் வெளிவர வேண்டிய விதத்தினை உறுதி செய்தார். இயக்குநர் மகிழ் திருமேனியும் சிறப்பாக இயக்கி இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, ஆரவ், ரெஜினா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்டாலும், இன்னும் படக்குழு உறுதி செய்யவில்லை.

SCROLL FOR NEXT