தமிழ் சினிமா

‘விவேகம்’ தோல்விக்கான காரணம்: ஒளிப்பதிவாளர் வெற்றி வெளிப்படை

ஸ்டார்க்கர்

‘விவேகம்’ படத்தின் தோல்விக்கான காரணம் குறித்து ஒளிப்பதிவாளர் வெற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

‘விவேகம்’ படத்தில் தோல்விக்கான காரணம் குறித்து ஒளிப்பதிவாளர் வெற்றி பேசியிருக்கிறார். அதில் “ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு சிக்கல் வரும். ‘விவேகம்’ படத்தைப் பொறுத்தவரை வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டார்கள். இன்னுமொரு இரண்டு மாதங்கள் நேரம் கொடுத்திருந்தால் ‘வீரம்’, ‘வேதாளம்’ மாதிரி பெரிய வெற்றி படமாக ஆகியிருக்கும். கிராபிக்ஸ் காட்சிகளுக்கு இன்னும் நேரம் கொடுத்திருக்கலாம்.

படத்தின் வெளியீட்டுத் தேதியை மாற்றினால் தயாரிப்பாளருக்கு பெரிய சிக்கல் ஏற்படும். ஏனென்றால் அதை வைத்து தான் பைனான்ஸ் விஷயங்கள் எல்லாமே இருக்கும். ’வேதாளம்’ படத்தினை 6 மாதத்தில் படப்பிடிப்பு எல்லாமே முடித்து வெளியிட்டோம். ’விவேகம்’ படத்துக்கு கிராபிக்ஸ் காட்சிகளுக்கு போதிய நேரமில்லை.

ஏன், அப்படத்தினை ப்ரீவ்யூ பார்க்க கூட நேரமில்லாமல் இருந்தது. சில விஷயங்கள் சரி செய்திருக்கலாம். ஆனால், அதற்கான சூழல் அமையவில்லை” என்று தெரிவித்துள்ளார் ஒளிப்பதிவாளர் வெற்றி.

சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விவேகம்’. சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. இதன் தோல்வியால் அதே நிறுவனத்துக்கு ‘விஸ்வாசம்’ நடித்துக் கொடுத்தார். அப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT