‘அமரன்’ படம் ராணுவ சீருடையில் சேவை செய்யும் அனைவருக்கும், உயிர் நீத்தவர்களுக்கும் ஒரு சமர்ப்பணம் என்று அண்ணாமலை புகழாரம் சூட்டியிருக்கிறார்.
’அமரன்’ படம் பார்த்துவிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார். லண்டனில் படம் பார்த்துவிட்டு அவர் வெளியிட்டுள்ள பதிவில், “’அமரன்’ படம் பார்க்க நேர்ந்தது. இது பல அம்சங்களில் மிக முக்கியமான திரைப்படம். சீருடையில் இருக்கும் நமது ஆட்களின் வீரம், துணிச்சல் மற்றும் நேர்மை காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. நமது நாட்டின் மிகச்சிறந்த வீரர்கள், எஞ்சியுள்ள நம்மை பாதுகாக்கும் பொருட்டு தங்களை தாங்களே தியாகம் செய்யும்போது ஒரு குடும்பம் கொடுக்கும் விலை என்ன என்பது தெளிவாக காட்டப்பட்டுள்ளது. ஏன் நம் அனைவரையும் விட ஒரு சிலர் எப்போதும் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்களாக உள்ளனர். ஏனெனில், அவர்கள் தங்களது சீருடையை அணிந்து கொண்டு விருப்பத்துடன் ஆபத்தை நோக்கி செல்கின்றனர்.
உணர்வுபூர்வமான துயரத்தையும் வலியையும் ஒரு ராணுவ வீரனின் குடும்பம் பெருமையுடன் சுமக்கிறது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை பல யுகங்களுக்கு ஊக்கம் தரும் கதையாக இருக்கும். 2014-ல் நம் நாட்டுக்காக அவர் செய்த உச்சபட்ச தியாகம், நமக்குள் நாம் எதையோ ஒன்றை இழந்துவிட்ட உணர்வை நமக்கு தந்தது. நான் என்னுடைய காக்கி சீருடையில் இருந்த அந்த காலகட்டத்தில் உணர்ச்சிகர தருணங்கள் எனக்கு துல்லியமாக நினைவில் உள்ளன.
ராஜ்குமார் பெரியசாமியின் அருமையான இயக்கம் நடிப்பு, சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் அற்புதமான நடிப்பு, வேறு யாராலும் செய்திருக்க முடியாத சாய் பல்லவியின் கதாபாத்திரம், விறுவிறுப்பான இசை மற்றும் கேமரா. இந்த படத்தை தயாரித்த கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றிகள்.
இப்படம் சீருடையில் சேவை செய்யும் அனைவருக்கும், உயிர் நீத்தவர்களுக்கும் ஒரு சமர்ப்பணம் என்று கருதுகிறேன். நமது ராணுவ படைகள் நீடுழி வாழ்க.. இதை நாங்கள் பெருமையுடன் சொல்கிறோம் - நீங்கள்தான் சிறந்தவர்கள். இந்த அற்புதமான படத்தை கொடுத்த அமரன் படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
அண்ணாமலையின் இந்தப் பதிவுக்கு தயாரிப்பாளர் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் தங்களுடைய நன்றியைத் தெரிவித்துள்ளனர். தீபாவளிக்கு திரைக்கு வந்துள்ள ‘அமரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. 4 நாட்கள் ஒட்டுமொத்த வசூலில் 150 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.