கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படம் தீபாவளி ரிலீசாக வெளியாகி வசூல் ரீதியாகவும், திரை விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 2014-ம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் தனது இன்னுயிரை நீத்த சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களே இப்படத்தின் கதை என்பது அனைவருக்கும் தெரியும்.
திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு, நடிகர்களின் தேர்ந்த நடிப்பு என பாராட்டுவதற்கு ஏராளமான அம்சங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், படம் முழுக்க நெருடலை ஏற்படுத்தக்கூடிய சில பிரச்சினைகளை சுட்டிக் காட்ட வேண்டிய தேவை அவசியமாகிறது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு படத்தின் கதாபாத்திரங்களை திரையில் காட்டியதில் நம்பகத்தன்மை சார்ந்த சில கேள்விகள் எழாமல் இல்லை என்கின்றனர் ஒரு தரப்பினர்.
‘படத்தின் இரண்டு பிரதான கதாபாத்திரங்களில் ஒன்றான சாய் பல்லவியின் கதாபாத்திரம், அதாவது மேஜர் முகுந்தின் மனைவி இந்து ரெபக்கா வர்கீஸ் படம் முழுக்க ஒரு கிறிஸ்தவ பெண்ணாகவே காட்டப்படுகிறார். அதுதான் உண்மையும் கூட. படத்தில் வரும் இந்து ரெபக்கா வர்கீஸின் பெற்றோர் வீடாகட்டும், திருமணத்துக்குப் பிறகு அவர் இருக்கும் ஒரு அபார்ட்மென்ட்டின் சுவரில் தொங்கும் இயேசுவின் படமாகட்டும், இப்படி படம் முழுக்க இது மிகவும் தெளிவாக காட்டப்படுகிறது. அதில் குறை சொல்ல எதுவும் இல்லை.
ஆனால், இந்த விவரிப்புகள் மேஜர் முகுந்தாக நடித்த சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்தில் ஏன் இல்லை என்பது இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்குமே வெளிச்சம். நிஜ வாழ்க்கையில் மேஜர் முகுந்த் ஒரு பிராமணக் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை திரையிலும் காட்ட என்ன தயக்கம்? படத்தின் தயாரிப்பாளரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசனுக்கு ஒரு பிரமாண சமூகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரை அவரது சொந்த அடையாளத்துடன் காண்பிப்பதில் ஏதேனும் பிரச்சினையா என்பதை அவர்தான் விளக்க வேண்டும். அல்லது, படத்தை வெளியிட்ட ஆளும் கட்சி பின்னணியைக் கொண்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் கொடுத்த அழுத்தமா?
படம் முழுக்க சிவகார்த்திகேயன் அவரது தந்தையை ‘நைனா’ என்று விளிப்பதும் திட்டமிட்டு திணிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது. முகுந்த் ராணுவ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற உண்மையும் மறைக்கப்பட்டு, படத்தில் முகுந்தின் தாய் ஆரம்பம் முதல் கிட்டத்தட்ட அவர் ராணுவத்தில் சேர்ந்த பிறகும் கூட தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்துவதாக காட்டப்படுகிறது.
சாய் பல்லவியின் கதாபாத்திரம் கிட்டத்தட்ட படத்தில் பல காட்சிகளில் கழுத்தில் சிலுவை அணிந்த, கடவுளுக்கு அஞ்சும் பெண்ணாக காட்டப்படும் அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் கதாபாத்திரத்தின் உண்மையான அடையாளம் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதாகவே இதனை பார்க்க முடிகிறது. இப்படி இருக்கும்போது இப்படத்தை எவ்வாறு உண்மையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பயோபிக் என்று கூற இயலும்’ என்பதே இந்தப் படம் குறித்த முரண்பாடுகளை முன்வைப்பவர்களின் வாதமாக இருக்கிறது.
இதே பிரச்சினை சில ஆண்டுகளுக்கு முன்பு சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ படத்திலும் நிகழ்ந்தது. தமிழ் பிரமாண சமூகத்தைச் சேர்ந்த கேப்டன் கோபிநாத்தின் கதாபாத்திரம் அந்தப் படத்தில் வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்தவராகவும், இன்னும் ஒரு படி மேல போய் தீவிர கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவராகவும் காட்டப்பட்டிருந்ததையும் சிலர் இப்போது நினைவுகூர்வதையும் கவனிக்க முடிகிறது.
ஏன் இந்த பாரபட்சம்? - ராணுவமோ, கடற்படையோ, விமானப் படையோ அதில் பணியாற்றும் வீரர்களை சாதி, மத அடையாளங்களுக்குள் அடைக்கக் கூடாது. அவர்கள் செய்யும் சேவை காரணமாகவே அவர்கள் கொண்டாடப்பட வேண்டும். அதே நேரம் நாட்டுக்காக வீர மரணம் அடைந்த ஒரு ராணுவ வீரரின் கதையை திரைப்படமாக எடுக்கும்போது, அதில் அவரைப் பற்றிய உண்மைத் தகவல்கள் திரிபுகள் இன்றி இடம்பெறுதல் அவசியம்.
இதே கதையில் மேஜர் முகுந்த் வரதராஜனை வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று மாற்றிக் கூறினால், அது எவ்வளவு அபத்தமாகுமோ அப்படித்தான் அவரது சொந்த அடையாளத்தை மறைப்பதும். அப்படி மறைத்தால் அது பயோபிக் படமல்ல என்பதே விமர்சனத்தை முன்வைப்போரின் வாதம். மேலும், ‘அமரன்’ படத்தின் இடம்பெற்றுள்ள மற்ற விவரிப்புகள் அனைத்தும் துல்லியமாக இருக்கையில், இது மட்டும் பாரபட்சத்துடன் திட்டமிட்டு மறைக்கப்படுவதில் இருக்கும் உள்நோக்கம் என்ன? இதுவும் தொடர்ந்து திராவிட ஆதரவாளர்களால் வெளிப்படுத்தப்படும் பிரமாணர்கள் மீதான வெறுப்பின் நீட்சியோ என்று எண்ணத் தோன்றுகிறது என்ற பார்வையும் சமூக வலைளங்களில் பதியப்பட்டு வருகிறது.
ஏன் இங்கு திராவிட ஆதரவாளர்கள் என்று குறிப்பிட வேண்டிய அவசியமென்றால், சில ஆண்டுகளுக்கு முன்பு புல்வாமா தாக்குதலில் ஏராளமான ராணுவ வீரர்கள் உயிரிழந்த அந்த துயரமான தருணத்தில் திராவிட இயக்க தலைவர்களில் ஒருவரான சுப.வீரபாண்டியன், தனது எக்ஸ் (அப்போது ட்விட்டர்) பக்கத்தில் இப்படி ஒரு பதிவை இடுகிறார். “புல்வாமாவில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்றும், அவர்களில் ஒருவர் கூட பார்ப்பனர் இல்லை என்றும் பேசிக் கொள்கின்றனரே, உண்மையா?” என்பதே அந்தப் பதிவு.
ராணுவ வீரர்கள் தங்கள் இன்னுயிரை நீத்த அத்தகைய சூழலிலும் கூட அவர்களது சாதியை ஆராய வேண்டிய தேவை என்ன? இப்படியான புரட்டுகளுக்கு எதிர்வினையாற்ற வேண்டியே மேஜர் முகுந்த் போன்ற வீரர்களின் உண்மையான அடையாளம் வெளிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது. ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரை ராணுவ வீரனாக, கதாநாயகனாகவோ காட்டுவதற்கு தமிழ் சினிமாவில் எழுதப்படாத தடை இருப்பது தெரிந்த விஷயம்தான். அதற்கு ‘அமரன்’ படமும் விதிவிலக்கல்ல என்று பதியப்பட்டு வரும் கருத்துகளையும் கண்டுகொள்ளாமல் இருத்தல் சரியல்ல.