பா.ரஞ்சித் இயக்கவுள்ள அடுத்தப் படம் என்ன என்பது தெரியவந்துள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தங்கலான்’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. ஆனால், முதலீட்டுக்கு மோசமில்லை என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, பா.ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தது. ‘பர்சி முண்டா’ என்ற இந்திப் படம் இயக்கவுள்ளார், ‘சர்பட்டா பரம்பரை 2’ இயக்கவுள்ளார் என பலரும் தெரிவித்து வந்தார்கள். ஆனால், இந்த இரண்டு படங்களையுமே பா.ரஞ்சித் இயக்கவில்லை.
அடுத்ததாக ‘வேட்டுவம்’ என்ற படத்தினை அவர் இயக்கவுள்ளார். இதில் தினேஷ் நாயகனாக நடிக்கவுள்ளார். அவருக்கு வில்லனாக ஆர்யா நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அட்டகத்தி படத்தின் மூலம் தினேஷை நாயகனாக அறிமுகப்படுத்தியவர் பா.ரஞ்சித். அதற்குப் பிறகு இப்போது தான் மீண்டும் தினேஷ் - பா.ரஞ்சித் இருவரும் இணைந்து பணிபுரியவுள்ளது குறிப்பிடத்தக்கது.