தமிழ் சினிமா

திரை விமர்சனம்: தீபாவளி போனஸ்

செய்திப்பிரிவு

கொரியர் நிறுவனத்தில் வேலை செய்கிறார் ரவி (விக்ராந்த்). அவரது மனைவி கீதா (ரித்விகா), அடுக்ககம் ஒன்றில் வீட்டுப் பணிப்பெண். சொற்ப வருமானத்தில் வாழும் இந்த தம்பதியின் 10 வயது மகன் போஸ், தீபாவளிப் புத்தாடையாக ‘போலீஸ் டிரஸ்’ கேட்கிறான். கணவனுக்குப் புதிய தலைக்கவசம் வாங்கிப் பரிசளிக்க நினைக்கிறார் கீதா. மனைவி விரும்பிய புடவையை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பது ரவியின் துடிப்பு. இந்த அடித்தட்டுக் குடும்பத்தின் தீபாவளிக் கனவுகள் நிறைவேறியதா? என்பது கதை.

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் இருக்கும் நிலையூர் என்ற கிராமத்தையும், அங்கிருந்து மதுரை வந்து பிழைக்கும் குடும்பம் ஒன்றின் பண்டிகைக் கால நெருக்கடிகளும்தான் படம். கதையும் களமும் இவ்வளவுதானா என எண்ணத் தோன்றலாம். ஆனால், ஒரு சாமானியக் குடும்பத்தின் பண்டிகைக் கால விருப்பங்கள், அதற்காக அவர்கள் போனஸை எதிர்பார்த்துக் காத்திருப்பது, அது கிடைக்கத் தாமதமாவது, குடும்பத்தின் தேவையை நிறைவேற்ற வேண்டிய கடமையால் நாயகன் எடுக்கும் முடிவு, அதனால் ஏற்படும் எதிர்விளைவு, இறுதியில் அந்தக் குடும்பம் தீபாவளியை எப்படிக் கொண்டாடியது என்கிற முடிவு எனத் திரைக்கதையின் நிகழ்வுகளை, அடிதட்டு மக்களின் வாழ்க்கையிலிருந்து பிரதியெடுத்து சித்தரித்திருப்பது காட்சிகளின் பலம்.

ஒரு கட்டத்தில் திரைக்கதையின் முக்கிய சம்பவத்தின் முடிச்சு அவிழ்ந்த பின்னரும் கூட அந்தக் குடும்பத்தின் கனவுகள் எப்படியாவது நிறைவேற வேண்டும் எனப் பார்வையாளர்களைத் தூண்டுவது போல சொல்லப்பட்ட விதத்தில் எளிமையின் கம்பீரம் இந்தப் படம். தீமையான பாதையில் செல்லாமல், கடமை, உழைப்பு ஆகியவற்றில் பொருளாதாரப் படிநிலைகளுக்கு ஏற்ப, அனைவருக்கும் பிரச்சினைகள் இருந்தே தீரும் என்பதை இயல்பாகச் சொல்லிச் செல்லும் அறிமுக இயக்குநர் ஜெயபாலுக்கு நல்வரவு கூறலாம்.

முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள விக்ராந்த் - ரித்விகா - சிறுவன் போஸ் மூவரும் குடும்பமாக நம் மனதைக் கொள்ளையடித்து விடுகிறார்கள். திருப்பரங்குன்றத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மண் மணக்கக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கவுதம் சேதுராம். மரிய ஜெரால்டின் இசையிலும் பழுதில்லை.சொல்ல வந்ததை சினிமா பூச்சு இல்லாமல் சொன்னதுடன், எளியவர்கள் நேர் வழியில் அடுத்தகட்டம் நோக்கி உயர விரும்பும் துடிப்பை எடுத்துச்சொல்லும் இப்படம் மகிழ்ச்சியை தரும் ‘தீபாவளி போனஸ்’.

SCROLL FOR NEXT