தமிழ் சினிமா

திவான் பகதூர்: டி.ஆர்.ராமச்சந்திரனின் ஆங்கில உச்சரிப்புக்கு பரிசு! 

செய்திப்பிரிவு

தமிழ் சினிமாவின் முதல் முழு நீள நகைச்சுவைப் படமான ‘சபாபதி’யின் (1941) வெற்றிக்குப் பிறகு பெரும் நட்சத்திரமானார் டி.ஆர்.ராமச்சந்திரன். 40-களில் முன்னணி காமெடி நடிகராக இருந்த இவர், சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். அதில் ஒன்று, ‘திவான் பகதூர்’.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இந்தப் படத்தை டி.ஆர்.சுந்தரம் இயக்கினார். கதை, திரைக்கதை, வசனத்தை எம்.ஹரிதாஸ் எழுத, டி.ஏ.கல்யாணம் இசை அமைத்தார். இசை அமைப்பாளர் கே.வி. மகாதேவன், இதில் அவருக்கு உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். பாடல்களை எஸ்.வேலுசாமி எழுதியிருந்தார்.

ஜே.சுசீலா நாயகி. காளி என்.ரத்தினம்,கே.கே.பெருமாள், சகாதேவன், எம்.இ.மாதவன், வி.என்.குமாரசாமி, வி.எம்.ஏழுமலை, பி.எஸ்.சிவபாக்யம், டி.என்.ராஜலட்சுமி, சி.டி.ராஜகாந்தம், பி.ஆர்.மங்களம், பி.எஸ்.ஞானம் என பலர் நடித்தார்கள்.

படத்தின் தொடக்கத்தில் ‘டைட்டில் கார்டை’யே வித்தியாசமாகக் காட்டினார்கள். மாறியிருக்கும் எழுத்துக்கள் தலைகீழாகத் தெரிந்து பிறகு சரியாகி வருவது போல அமைத்திருந்தார்கள். தொழில்நுட்பம் அதிகம் வளராத அந்தக் காலகட்டத்தில் இதைப் புதுமையாகப் பேசினார்கள், அப்போதைய பார்வையாளர்கள்.

கதைப்படி கல்வியறிவில்லாத பணக்காரர் காளி என்.ரத்தினத்துக்கு திவான் பகதூர் பட்டம் அளிக்கிறது பிரிட்டிஷ் அரசு. அவருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யும் கதாநாயகன் டி.ஆர்.ராமச்சந்திரன் தேர்தலில் வென்று அமைச்சராவது கதை.

இங்கிலாந்தில் படித்த மாடர்ன் தியேட்டர்ஸ் இயக்குநர் டி.ஆர்.சுந்தரம், இதில் நடித்த, டி.ஆர்.ராமச்சந்திரனின் ஸ்டைலான ஆங்கில உச்சரிப்பைக் கண்டு வியந்து அவருக்குப் பரிசு கொடுத்ததாகச் சொல்வார்கள்.படத்தில், தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கும் டி.ஆர்.ராமச்சந்திரன், மதுக்கடைகளை ஒழிப்பேன் என்று பேசும் வசனங்கள் இன்றைய காலகட்டத்துக்கும் அப்படியேபொருந்துகிறது.

கள்ளுக்கடை முதலாளியின் மிரட்டலுக்குப் பயந்து, குடியைப் பாராட்டிப் பேசச் செல்லும் டி.ஆர்.ராமச்சந்திரன், நம் பொண்டாட்டி, பிள்ளைகள், பிச்சை எடுக்கிற பெருமை, குடியில்லை என்றால் எப்படிக் கிடைக்கும்? நமது தாயும் தந்தையும் கஞ்சிக்கு அலைகிற கவுரவம் எப்படிக் கிடைக்கும்? என்று வஞ்சப்புகழ்ச்சியாகக் கேட்பது என பல இடங்களில் வரும் வசனங்கள் அப்போது பேசப்பட்டன. டி.ஆர்.ராமச்சந்திரன் சில இடங்களில் மேடையில் ஆங்கிலத்தில் பேசுவார்.

அவர் நண்பர் அதை மொழி பெயர்ப்பது உள்ளிட்ட சில காட்சிகளை இப்போதைய படங்களில் அப்படியே மாற்றி எடுத்திருப்பதையும் பார்க்க முடிகிறது. 1943-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படத்தில் ஒரு கள்ளுக்கடை பாடலும் இருக்கிறது.

SCROLL FOR NEXT