விஜய் மாநாட்டை முன்னிட்டு நாளை மாலை ஒளிபரப்பாகும் படத்தினை மாற்றி அமைத்துள்ளது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை (அக். 27) நடைபெறுகிறது. இதற்காக விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விஜய்யின் முதல் அரசியல் பேச்சு என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அரசியல் கட்சியினரும் என்ன நடக்கிறது, என்ன பேசுவார் என்பதை உற்று நோக்கி வருகிறார்கள்.
இதனிடையே, திமுகவினரின் நட்பு தொலைக்காட்சி சன் டிவி. இதில் ஞாயிற்றுகிழமை மாலை என்றாலே மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற படம் அல்லது புதிய திரைப்படத்தை ஒளிபரப்புவார்கள். விஜய் மாநாடு நடைபெற இருப்பதால் அன்றைய தினம், மக்களின் கவனம் அதில் தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.
முதல் அக்டோபர் 27-ம் தேதி மாலை ரஜினி நடித்த ‘முத்து’ திரைப்படம் ஒளிபரப்பாகும் என விளம்பரப்படுத்தினார்கள். ஆனால், நாளுக்கு நாள் விஜய்யின் மாநாட்டுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதனை கணக்கில் கொண்டு, ‘முத்து’ படத்துக்கு பதிலாக ‘ஜெயிலர்’ ஒளிபரப்பாகும் என தற்போது விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.
மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘ஜெயிலர்’. இந்த ஒளிபரப்பினால் பலரும் விஜய்யின் மாநாட்டை விட்டு, ‘ஜெயிலர்’ பார்ப்பார்கள் என்பது சன் டிவியின் எண்ணம். நாளை மாலை தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் விஜய் தனது உரையினை மாலை 6:30 மணிக்கு துவங்க உள்ளார். சுமார் ஒன்றரை மணி நேரம் பேசுவார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.