தமிழ் சினிமா

காந்தி கிருஷ்ணாவின் ‘பிரேக் பாஸ்ட்’!

செய்திப்பிரிவு

விஷால் நடித்த ‘செல்லமே’, தமன்னா நடித்த ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கியவர், காந்தி கிருஷ்ணா. இவர் இப்போது இயக்கியுள்ள படம் ‘பிரேக் பாஸ்ட்’. இதில் புதுமுகங்கள் ராணவ், ரோஸ்லின், க்ரித்திக் மோகன், அமிதா ரங்கநாதன் மற்றும் அர்ச்சனா, சம்பத்ராம், ரவிமரியா என பல நடித்துள்ளனர்.

பிரேம் கிளாசிக் பிக்சர்ஸ் சார்பில் கிரிஜா வரதராஜ் தயாரித்துள்ளார். பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் காந்தி கிருஷ்ணா கூறும்போது, “நம் கலாச்சார மாற்றம் பற்றிப் பேசும் படம் இது. தொடுதிரை ஃபோன் வந்த பிறகு அதாவது கடந்த 10 வருடத்துக்குள் நடந்த கலாச்சார மற்றும் உளவியல் ரீதியான மாற்றங்களைப் பற்றி இதில் பேசியிருக்கிறோம். இந்த மாற்றங்களால் நிறைய சந்தோஷங்களை இழந்திருக்கிறோம். அதை எப்படிச் சரி செய்யலாம் என்று கூறியிருக்கிறோம். இது காதல் கதை என்றாலும் நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட்டாக இருக்கும். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன” என்றார்.

SCROLL FOR NEXT