தமிழ் சினிமா

கார்டியன் பார்வையில் கிரிக்கெட் சினிமா: உலக அளவில் சென்னை 28-க்கு சிறப்பிடம்!

ஸ்கிரீனன்

தனது முதல் படத்திலிருந்தே ரசிகர்களின் முழுமையான வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர் வெங்கட்பிரபு. ஒரு நடிகராக, பாடகராக இவர் பெற்ற வெற்றிகளை விட, இயக்குநராக பெற்ற வெற்றிகள் அதிகம். பெரும்பாலும் இளைஞர் பட்டாளத்தையே தனது ரசிகர் வட்டமாக வைத்திருக்கும் வெங்கட்பிரபு, அஜித் குமாரை வைத்து இயக்கிய 'மங்காத்தா'வினால், பன்மடங்கு அந்த வட்டத்தைப் பெரிதாக்கிக் கொண்டார்.

தனது முதல் படமான 'சென்னை-28' மூலம் முத்திரை பதித்த வெங்கட் பிரபுவிற்கு, மீண்டும் அதே திரைப்படத்தினால் புதிய கவுரவம் ஒன்று தேடிவந்துள்ளது. உலகம் முழுவது வெளியான கிரிக்கெட் சார்ந்த படங்களில் சிறந்த 5 தருணங்கள் என பிரிட்டைனின் பிரபல பத்திரிக்கையான 'தி கார்டியன்' வெளியிட்டுள்ள பட்டியலில், வெங்கட் பிரபுவின் சென்னை-28 திரைப்படமும் இடம்பெற்றிருப்பதே அந்த கவுரவம்.

வீதி கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களின் வாழ்க்கையை சிறப்பாக திரையில் காடியிருந்தார் வெங்கட்பிரபு. இந்த படத்தைப் பற்றி தி கார்டியனில், "காதல், நட்பு மற்றும் கிரிக்கெட்டைப் பற்றிய வெங்கட்பிரபுவின் இந்த முதல் திரைப்படத்தில், படத்தின் முக்கியப் பாத்திரம் ஒன்று, எதிரணியினரின் பகுதிக்கு குடிபெயர்ந்து செல்லும் காட்சி அருமையாக படமாக்கப்பட்டிருக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்திய அளவில் 'லகான்' மற்றும் 'சென்னை-28' ஆகிய திரைப்படங்கள் மட்டுமே அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, தென் இந்தியாவிலிருந்து வெங்கட் பிரபு மட்டுமே அதில் இடம்பெற்றுள்ளார். >இந்தப் பட்டியலில் உள்ள மற்றுமொரு திரைப்படம், திகில் படங்களின் மன்னன் என்று அழைக்கப்படும் ஆல்பிரட் ஹிட்ச்காக் இயக்கத்தில் வெளியான 'தி லேடி வேனிஷஸ்' என்ற திரைப்படம். ஹிட்ச்காக் படத்தோடு, தன்னுடைய திரைப்படமும் பட்டியலில் இணைந்திருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையாக பகிர்ந்துகொண்டுள்ளார் வெங்கட் பிரபு.

SCROLL FOR NEXT