தமிழ் சினிமா

அபூர்வ சகோதரர்கள்: வில்லனாக நடிக்க மறுத்த பி.யு.சின்னப்பா!

செ. ஏக்நாத்ராஜ்

ஹாலிவுட் படங்களின் தாக்கத்தில் படங்களை உருவாக்குவது, தமிழ் சினிமா தொடங்கிய காலகட்டங்களிலேயே வழக்கமாகிவிட்டது. மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம், எஸ்.பாலசந்தர் போன்றோர் ஹாலிவுட் படங்களின் பாதிப்பில் பல படங்களைத் தமிழ் ரசிகர்களுக்குத் தந்திருக்கிறார்கள். அப்படி ஆச்சார்யா இயக்கத்தில் உருவான படம், ’அபூர்வ சகோதரர்கள்’!

தூத்துக்குடியைச் சேர்ந்த இந்த கோவிந்தாச்சாரி ராகவாச்சாரி (டிஜிஆர் என்றும் அழைப்பார்கள்) என்ற ஆச்சார்யா, ஜெமினியின் பிரம்மாண்ட ‘சந்திரலேகா’வின் (1948) கதையை உருவாக்கியவர். அந்தப் படத்தின் புகழ்பெற்ற டிரம்ஸ் டான்ஸ் காட்சிகள் உட்பட சில காட்சிகளை இயக்கியவர் இவர்.

இந்த அபூர்வ சகோதரர்கள், அலெக்சாண்டர் டூமாசின் ‘தி கோர்சிகன் பிரதர்ஸ்’ என்ற நாவலில் இருந்து தயாரான ஹாலிவுட் படத்தின் தழுவல். சாதாரண பழிவாங்கும் கதை. பெற்றோரைக் கொன்றுவிடுவதால், சிறுவயதிலேயே தனித் தனியாகப் பிரிந்துவிடும் சகோதரர்கள், பிறகு வளர்ந்து வில்லனைப் பழிவாங்கும் படம்.

எம்.கே.ராதா ஹீரோ. அவருக்கு விஜயசிம்மன், விக்ரமசிம்மன் என இரண்டு வேடம். பானுமதி நாயகி. நாகேந்திர ராவ், சூரியபிரபா, ஜி.பட்டு, நாராயண ராவ், வி.பி.எஸ்.மணி, கிருஷ்ணா பாய், ஸ்டன்ட் சோமு என பலர் நடித்தனர்.

எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி ஸ்டூடியோ தயாரித்த இந்தப் படத்துக்கு கமால் கோஷ் ஒளிப்பதிவு செய்தார். ராஜேஷ்வர ராவ், எம்.டி.பார்த்தசாரதி, ஆர்.வைத்தியநாதன் இசை அமைத்தனர். கொத்தமங்கலம் சுப்பு, வீ.சீதாராமன் பாடல்கள் எழுதினர். பானுமதி பாடிய, ‘மானும் மயிலும் ஆடும் சோலை’, ‘லட்டு லட்டு’ பாடல்கள் அப்போது அதிக வரவேற்பைப் பெற்றன.

இந்தப் படத்தில் முதலில் வைஜெயந்தி மாலா நாயகியாக நடிப்பதாக இருந்தது. பிறகு கடைசி நேரத்தில் அவருக்குப் பதிலாக பானுமதி நடித்தார். இந்தப் படத்தின் வெற்றியால் பானுமதிக்கு வாய்ப்புகள் குவிந்தன.

இதில் நெகட்டிவ் கேரக்டர் முக்கியத்துவம் கொண்டது என்பதால், அப்போதைய டாப் ஹீரோ பி.யு.சின்னப்பாவிடம் பேசினார், தயாரிப்பாளர் வாசன். தனது இமேஜ் பாதிக்கப்படும் என்று அவர் மறுத்ததால் கன்னட நடிகரும் தமிழில் சில படங்களில் நடித்திருப்பவருமான நாகேந்திரராவை ஒப்பந்தம் செய்தார்.

இந்தப் படத்தில் எம்.கே.ராதாவின் சண்டைக் காட்சிகளையும் ‘டபுள் ஆக்ட்’ காட்சிகளையும் கண்டு ஆச்சரியமடைந்தனர், ரசிகர்கள். எம்.கே.ராதா, பானுமதியின் நடிப்பும் பாராட்டப்பட்டது. தமிழ், இந்தியில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டது.

தெலுங்கில் ‘அபூர்வ சகோதரலு’ என்றும் இந்தியில் ‘நிஷான்’ என்றும் வெளியானது. இந்தியில் நம்மூர் ரஞ்சன் நாயகனாக நடிக்க, மூன்று மொழிகளிலும் பானுமதி நாயகியாக நடித்தார்.

1949-ம் ஆண்டு இதே நாளில் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதே கதையை கொண்டதுதான் எம்.ஜி.ஆரின் ‘நீரும் நெருப்பும்’. இதே கான்செப்டில் தமிழில் பல படங்கள் உருவாகி இருக்கின்றன.

SCROLL FOR NEXT