தனுஷ் உடனான நட்பு குறித்து நித்யா மேனன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் மூலம் தனுஷ் - நித்யா மேனன் இருவரும் நண்பர்களாக வலம் வருகிறார்கள். மேலும், அந்தப் படத்துக்காக தேசிய விருதினையும் வென்றார் நித்யா மேனன்.
தற்போது தனுஷ் இயக்கி வரும் ‘இட்லி கடை’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நித்யா மேனன். தனுஷ் உடனான நட்பு, ‘இட்லி கடை’ ஆகிய படங்கள் குறித்து நித்யா மேனன் பேட்டியொன்றில் பேசியிருக்கிறார்.
அதில் அவர், ”ஆக்கபூர்வமாகவும், தொழில் ரீதியாகவும் ஒரு படத்துக்கோ அல்லது கதாபாத்திரத்துக்கோ என்னால் என்ன செய்ய முடியும் என்பதை தனுஷ் மதிக்கிறார். அவர் அனைத்து விஷயங்களையும் நேரடியாக சொல்லிவிடுவார்.
நிறைய பேர் வாழ்க்கையின் போக்கில் செல்வதில்லை. அனைவரும் மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்கின்றனர். ஆனால் தனுஷ் சினிமாவில் மிகுந்த கவனம் கொண்டவர். அவர் நல்ல படங்களை எடுக்க விரும்புகிறார். நிறைய படங்களை இயக்க விரும்புகிறார். என்னை பார்க்கும்போது அவர் ஊக்கம் பெறுகிறார். உடனே என்னிடம் மூன்று வெவ்வேறு கதைகளுடன் வந்து இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கிறார். அதன் பிறகு அந்த கதைகளை மேம்படுத்துகிறார்.
நாம் நல்ல நடிகர்கள். நம்மால் இதை செய்ய முடியும். எனவே மக்களுக்கு நிறைய கதைகளை கொடுப்போம் என்று சொல்லக்கூடிய நபர் எனக்கு தெரிந்து தனுஷ் தான். எதை செய்தாலும் அர்ப்பணிப்புடன் செய்யக்கூடிய மனிதர். அதை நான் மிகவும் பாராட்டுகிறேன். எனவே தான் அவருக்கு என்னால் முடிந்த வரையில் உதவ, அவருடைய படங்களில் பணிபுரிய முயற்சி செய்கிறேன். இது போல ஒருவரை ஒருவர் மதிக்கக்கூடிய, பாராட்டக்கூடிய, சேர்ந்து பணியாற்றக்கூடிய நபர்களை மிகவும் அரிது” என்று தெரிவித்துள்ளார்.