சென்னை: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டைட்டில் டீசர் எப்படி? - காய்கறி கடையில் நின்றிருக்கும் கீர்த்தி சுரேஷின் ஹேண்ட் பேக் கொள்ளையடிக்கப்படுகிறது. ஹேண்ட் பேக்கை திறந்து பார்க்கும் கொள்ளையர்கள் அதில், கத்தியும், துப்பாக்கியும், வெடிகுண்டும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். அடுத்த காட்சியில் கொள்ளையர்கள் இருக்கும் இடத்தில் மாஸாக என்ட்ரி கொடுக்கிறார் கீர்த்தி. தன்னுடைய பொருட்களை திரும்ப பெறும் அவரிடம், ‘நீங்கள் போலீஸா?’, ‘ரா ஏஜென்டா’, ‘டான் ஆ’ என கேட்கின்றனர். எல்லாவற்றையும் இல்லை என மறுக்கிறார் கீர்த்தி.
இடையில் அவர் சண்டையிடும் காட்சிகள் வந்து செல்கின்றன. மொத்தமாக படம் கீர்த்தி சுரேஷின் ஆக்ஷன் பக்கத்தை காட்டும் என்பதை டீசர் உணர்த்துகிறது. ஆனால், தொடர்ந்து, கலர் அடித்த தலை முடி, வித்தியாசமான சிகை அலங்காரம் மற்றும் நிறத்தை வைத்து ஒரு தரப்பினரை திருடர்களாகவும், கொள்ளையர்களாகவும் சித்தரித்திருப்பது நெருடல். டீசர் படம் குறித்த அறிமுகத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ரிவால்வர் ரீட்டா: கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம், ‘ரிவால்வர் ரீட்டா’. இதில் சுனில், அஜய் கோஷ், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, பிளேடு சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். சந்துரு இயக்கியுள்ள இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ், தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. டைட்டில் டீசர் வீடியோ: