சென்னை: திரைப்படங்களுக்கு இசையமைத்து சேவை வழங்கியதற்காக ஜிஎஸ்டி விதிப்பது தொடர்பாக பிரபல இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜூக்கு, ஜிஎஸ்டி இணை இயக்குநர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபரில் நோட்டீஸ் பிறப்பித்திருந்தார்.
இந்த நோட்டீஸை எதிர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தார். அதில், இசையமைப்பு தொடர்பான தனது படைப்புகளை தயாரிப்பாளர்களுக்கு நிரந்தர பதிப்புரிமை வழங்கிவிட்டதால் தனக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க முடியாது என்றும், எனவே தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள நோட்டீஸை ரத்து செய்ய வேண் டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஜிஎஸ்டி வரி விதிப்பது தொடர்பான நோட்டீஸை எதிர்த்து வழக்குத் தொடர முடியாது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம்தான் முறையிட முடியும் என உயர் நீதிமன்றம் மற்றொரு வழக்கில் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே ஜிஎஸ்டி இணை இயக்குநர் அனுப்பிய நோட்டீஸூக்கு ஹாரிஸ் ஜெயராஜ் ஆட்சேபங்களை முன்வைத்து பதிலளிக்கலாம் என அறிவுறுத்தி வழக்கை தள்ளுபடி செய்துஉத்தரவிட்டுள்ளனர். மேலும், ஹாரி்ஸ் ஜெயராஜின் ஆட்சேபத்தை ஜிஎஸ்டி அதிகாரிகள் 4 வாரத்தில் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.