விஜய்க்கு ‘தி கோட்’ மோதிரத்தை பரிசாக அளித்திருக்கிறார் தயாரிப்பாளர் சிவா. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்.5) முதல் சென்னையில் தொடங்குகிறது. இதில் பாடல் காட்சி ஒன்றை படமாக்கவுள்ளார்கள். இந்தப் படத்தின் பூஜை நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் படக்குழுவினருடன் பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டார்கள். இதில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவாவும் ஒருவர். இவர் விஜய்க்கு ‘தி கோட்’ என்று போடப்பட்ட தங்க மோதிரம் ஒன்றினை பரிசாக அளித்தார். இதை அணிந்து விஜய் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலானது. ‘தி கோட்’ படத்தில் விஜய்யுடன் தயாரிப்பாளர் சிவாவும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விஜய்க்கு ‘தி கோட்’ மோதிரம் பரிசளித்தது குறித்து சிவா, “GOAT படத்தின் பங்கு 100 கோடியை தாண்டியது என்பது மகிழ்ச்சியான செய்தி! மோதிரம் பரிசாக ஏற்றுக் கொண்டதற்கு நன்றி, குழந்தைப் போன்ற உற்சாகத்துடன் அதை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சியும் பாராட்டையும் வெளிப்படுத்துகிறது. இந்த மைல்கல்லுக்கு வாழ்த்துக்கள், தளபதி விஜய் அவர்களுக்கு” என்று தெரிவித்துள்ளார்.