சென்னை: ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பிரதான கதாபாத்திரங்களின் வீடியோக்களை ஒவ்வொன்றாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ராணா மற்றும் ஃபஹத் ஃபாசில் வீடியோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்தப் படத்தில் நடிகர் ராணா ‘நட்ராஜ்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் ‘ஸ்மார்ட்’ஆன லுக்கில் கவனம் ஈர்க்கிறார் ராணா. அவருக்கும் ரஜினிக்குமான காட்சிகள் வந்து செல்கின்றன. மற்றபடி அவரது கதாபாத்திரத்தின் தன்மை குறித்து எந்த காட்சியையும் படக்குழு வெளியிடவில்லை. அடுத்து, ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ஃபஹத் ஃபாசில். இந்தப் படத்தில் ‘பாட்ரிக்’ (patrick) என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கலர் கலர் சட்டையுடன், வித்தியாசமான டி-சர்ட் என உடைகளில் கவனம் ஈர்க்கும் ஃபஹத், அமிதாப்பச்சனிடம் மிகவும் பணிவுடன் கைகுலுக்குகிறார். வீடியோவின் இறுதியில் எதையோ பார்த்து நின்றுகொண்டிருக்கும் ஃபஹத்துக்கு பின்னால் ரஜினி வந்து நிற்கிறார். உடனே அவரை பார்த்து அதிர்ச்சியாகும் பஹத்தை தோளில் தட்டிக் கொடுக்கிறார் ரஜினி. ஜாலியான இந்த வீடியோ ரசிக்க வைக்கிறது. இதுவரை ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா, ஃபஹத் பாசில் ஆகியோரின் கதாபாத்திரங்களின் பெயர்களையும், அது தொடர்பான சிறிய வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தை த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். படம் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனிருத் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. அமிதாப் பச்சன், ராணா, ஃபகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.