பிரசாந்துடன் நடிகை சிம்ரன் நடித்து சமீபத்தில் வெளியான ‘அந்தகன்’ ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதில் அவர் நடிப்பும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் சிம்ரன் அடுத்து நடிக்கும் படத்தைஅவர் கணவர் தீபக் பஹா தயாரிக்கிறார்.
ஃபோர் டீ மோஷன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் அவர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘தி லாஸ்ட் ஒன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் மூலம் சினிமாவில், 28 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார்,நடிகை சிம்ரன். லோகேஷ் குமார் இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகிறது. திகில் மற்றும் ஃபேன்டசி வகையைக்கொண்ட இதில், இதுவரை தோன்றாத வித்தியாசமான வேடத்தில் அவர் நடிக்கிறார். சிம்ரனின் திரையுலகப் பயணத்தில் மைல்கல்லாக இந்தப் படம் இருக்கும் என்கிறது தயாரிப்பு தரப்பு. இதில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.