'ஆரண்ய காண்டம்' ப்ளூரே டி.வி.டியை வெளியிட எந்த நிறுவனமும் தயாராக இல்லை என்று தயாரிப்பாளர் சரண் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
ஜாக்கி ஷெராஃப், ரவி கிருஷ்ணா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்க, தியாகராஜன் குமாராஜா இயக்கிய படம் 'ஆரண்ய காண்டம்'. 2011-ஆம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தியாவில் வெளியாகும் முன்பே, தெற்காசிய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு சிறந்த படத்துக்கான நடுவர்கள் விருதை வென்றது. சிறந்த எடிட்டிங் மற்றும் சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றது.
தற்போது இப்படத்தைப் பற்றி பலர் பேசி வந்தாலும், ஜூன் 10, 2011-ல் வெளியானபோது யாராலும் கொண்டாடப்படவில்லை. இப்படத்தின் டி.வி.டிக்கள் உள்ளிட்ட எதுவுமே வெளியாகவில்லை. சென்சாரில் 'A' சான்றிதழ் பெற்று வெளியான இப்படம், மறுசென்சார் செய்யப்பட்டு 'U/A' சான்றிதழ் பெற்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
இப்படத்தின் ப்ளூரே டி.வி.டி வெளியிடுமாறு தொடர்ந்து ரசிகர்கள், தயாரிப்பாளர் சரணை வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், "எந்த ஒரு நிறுவனமும் 'ஆரண்ய காண்டம்' படத்தின் ப்ளூ ரே டி.வி.டியை வெளியிட எந்த நிறுவனமும் தயாராக இல்லை. என்னிடம் அதற்கான பொருளாதார வசதியில்லை. ரசிகர்கள் மன்னிக்கவும் என்ன செய்வது என்று யோசிக்கலாம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சரண் தெரிவித்துள்ளார்.
'ஆரண்ய காண்டம்' இயக்குநர் தியாகராஜன் குமாராஜா, அப்படத்தை தொடர்ந்து இன்னும் தனது அடுத்த படத்தை தொடங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.