ஹைதராபாத்: ‘தங்கலான்’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 வெளியானது. விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடித்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் முதல் நாளில் ரூ.26.44 கோடி வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவை படக்குழு ஹைதராபாத்தில் நடத்தியது. இதில் விக்ரம், பா.ரஞ்சித், மாளவிகா மோகனன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய நடிகர் விக்ரம், “இந்த விழாவில் பா.ரஞ்சித் என்னிடம் ஒரு விஷயத்தை குறிப்பிடச் சொன்னார். உங்கள் அனைவருக்கும் ‘தங்கலான்’ மிகவும் பிடித்திருப்பதால், நான், ஞானவேல்ராஜா, பா.ரஞ்சித் மூவரும் விரைவில் ‘தங்கலான்’ இரண்டாம் பாகத்தை எடுக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.