தமிழ் சினிமா

பிரபுதேவாவின் ‘சிங்காநல்லுர் சிக்னல்’ முதல் தோற்றம் எப்படி?

செய்திப்பிரிவு

சென்னை: பிரபுதேவா நாயகனாக நடிக்கும் ‘சிங்காநல்லூர் சிக்னல்’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரபுதேவா நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘பகீரா’. எதிர்மறையான விமர்சனங்களால் படம் தோல்வியைத் தழுவியது. அடுத்து அவர் ‘பேட்ட ராப்’ படத்தில் நடித்து வருகிறார். விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தி கோட்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்துக்கு‘சிங்காநல்லூர் சிக்னல்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஜே.எம்.ராஜா இயக்குகிறார். மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஸ்ரீமன், பவ்யா த்ரிகா, அயாஸ் கான் மற்றும் நிகில் தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் முதல் தோற்றத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

முதல் தோற்றம் எப்படி? - இந்தப் படத்தில் பிரபுதேவா ட்ராஃபிக் போலீஸாக நடிக்கிறார் என்பதை முதல் தோற்றம் உறுதி செய்கிறது. ட்ராஃபிக் போலீஸ் உடையுடன் படு ஸ்டைலாக, கிட்டத்தட்ட ஒரு நடன அசைவை பிரதிபலிப்பதைப் போல நின்றுகொண்டிருக்கிறார். அருகே சிக்னலும் உள்ளது. மேலும், போஸ்டரில் ‘எண்ணி துணிக கருமம்’ என்ற திருக்குறள் வாசகமும் இடம்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT