சென்னை: கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் கமலின் பல்வேறு கெட்டப்புகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ட்ரெய்லர் எப்படி?: “படிப்புக்கு ஏத்த வேலையில்லை; வேலைக்கு ஏத்த சம்பளம் இல்ல”, “திருட்றவன் திருடிட்டு தான் இருப்பான்” என தொடக்கமே ஊழல் குறித்த இளைஞர்களின் குமுறலாக வெளிப்படுகிறது. ஆங்காங்கே லஞ்சம் வாங்கும் காட்சிகள் வந்து செல்கின்றன. “சிஸ்டத்த சரி செய்ய துரும்ப கூட கிள்ளி போட்றதில்ல” என சித்தார்த் சொல்லி முடிக்க அடுத்து கமல்ஹாசனின் மாஸ் இன்ட்ரோ காட்டப்படுகிறது. ‘தசாவதாரம்’ படத்தில் வருவது போல பல கெட்டப்புகளில் காட்சியளிக்கிறார் கமல். இறுதியில் சட்டை கழட்டிக்கொண்டு சண்டை செய்வதெல்லாம் அதிரடி.
“இந்தியன் தாத்தா திரும்பி வரணும்; தப்பு செஞ்சா அதிலிருந்து தப்பிக்க முடியாதுங்குற பயம் வரணும்” உள்ளிட்ட வசனங்கள், சிஸ்டம் சரியில்ல வகையறாக்களின் குமுறல். ‘இந்தியன்’ முதல் பாகத்திலும் இதே ஊழல்தான் பேசப்பட்டது. 28 ஆண்டுகள் கழித்தும் அதே ஊழல்தான் கரு. அதைத் தாண்டி சமகால பிரச்சினைகள் குறித்து ட்ரெய்லரில் எதுவும் பேசப்படவில்லை.
“இது இரண்டாவது சுந்திர போர்; காந்தி வழியில நீங்க, நேதாஜி வழியில நான்”, “ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது” என்ற டயலாக்குடன் ட்ரெய்லர் முடிகிறது. வயதான இந்தியன் தாத்தா கெட்டப்பில் ஸ்ட்ண்ட் காட்சிகள் எந்த அளவுக்கு கனெக்ட் ஆகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தியன் 2: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியான பிரம்மாண்ட படம், ‘இந்தியன்’. அதில் சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதன் அடுத்த பாகம் ‘இந்தியன் 2’ என்ற பெயரில் இப்போது உருவாகி இருக்கிறது. இதில், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.
பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இப்படம் ஜூலை 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ட்ரெய்லர் வீடியோ: