தமிழ் சினிமா

ஸ்ரீதர் நிராகரித்த ‘படிக்காத மேதை’

செய்திப்பிரிவு

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் வங்க மொழியில் இருந்து பல திரைப்படங்கள் ரீமேக் செய்யப்பட்டிருக்கின்றன. அப்படி உருவான படங்கள் வெற்றியும் பெற்றுள்ளன. அதில், சிவாஜியின் ‘ப’ வரிசை படமான ‘படிக்காத மேதை’யும் ஒன்று.

வங்கமொழியில் ‘ஜோக் பியோக்’ என்ற பெயரில் 1953-ல் வெளியான படத்தைப் பார்த்த தயாரிப்பாளர், என்.கிருஷ்ணசாமி, இந்த சென்டிமென்ட் கதை, தமிழுக்கு செட் ஆகும் என்று ரீமேக் உரிமையை பெற்றார். ஸ்ரீதர் வசனம் எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைத்த கிருஷ்ணசாமி, அவரை படம் பார்க்க வைத்தார். இந்தப் படம் ஓடாது என்று முடிவு செய்த ஸ்ரீதர் , இப்போது சில படங்களுக்கு வசனம் எழுதி கொண்டிருப்பதால், தனது அசிஸ்டென்ட் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் பேசிப்பாருங்கள் என்றார்.

இதற்கிடையே இதில் நடிப்பதற்காக சிவாஜி கணேசனிடம் படத்தைப் போட்டுக்காட்டினார். நடிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்புள்ள படம் என்பதால் உடனே ஓகே சொன்னார், அவர். அதோடு, இதை பீம்சிங் இயக்கினால் நன்றாக இருக்கும் என்று சிபாரிசும் செய்தார்.

பணக்கார ராவ்பகதூர் சந்திரசேகர் (ரங்காராவ்) குடும்பத்தின் விசுவாச வேலைக்காரன் ரங்கன் (சிவாஜி), படிப்பறிவில்லாத அப்பாவி. ராவ்பகதூர் தொழிலில் நஷ்டமடைகிறார். குடும்பம் கடனில் மூழ்குகிறது. மகன்கள், மருமகள்கள், நண்பர்கள் என அனைவரும் சென்றுவிட, விசுவாச வேலைக்காரனும் வளர்ப்பு மகனுமான ரங்கன், பல அவமானங்களை கடந்து, குடும்பத்தை ஒன்றிணைப்பது கதை.

இதற்கு நாயகியாக கவர்ச்சி நடிகையை ஒப்பந்தம் செய்ய நினைத்திருந்தார் தயாரிப்பாளர். அந்த கேரக்டருக்கு சவுகார் ஜானகிதான் சரியாக இருப்பார் என்று சொல்லிவிட்டு, வேறு எந்த நடிகையை ஒப்பந்தம் செய்தாலும் படத்தில் இருந்து விலகிவிடுவேன் என்று செல்ல மிரட்டல் விடுத்தாராம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். பிறகு அவரையே ஒப்பந்தம் செய்தார்கள்.

பி.கண்ணாம்பா, டி.எஸ்.துரைராஜ், முத்துராமன், டி.ஆர்.ராமச்சந்திரன், டி.கே.பாலச்சந்திரன், அசோகன், ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, ஈ.வி.சரோஜா, சகுந்தலா, சுந்தரிபாய் என பலர் நடித்தனர். சிவாஜியும் ரங்காராவும் நடிப்பை அப்படிக் கொட்டியிருப்பார்கள்.

கே.வி.மகாதேவன் இசையில் கண்ணதாசன், மருதகாசி பாடல்களை எழுதினர். ‘எங்கிருந்தோ வந்தான்’, ‘ஒரே ஒரு ஊரிலே’, ‘படித்ததினால் அறிவு பெற்றோர்’, ‘சீவி முடிச்சு சிங்காரிச்சு’, ‘பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு’, ‘உள்ளதை சொல்வேன் சொன்னதைச் செய்வேன்’ உட்பட பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.

டிரெண்ட்செட்டராக அமைந்த இந்தப் படம் நூறு நாட்கள் ஓடியது. தெலுங்கில், இப்படம் ‘ஆத்மபந்துவு’ (1962) என்ற பெயரில் ரீமேக் ஆனது. தமிழில் நடித்த ரங்காராவும் கண்ணாம்பாவும் தெலுங்கிலும் நடித்தனர். இந்தியில் ‘மெஹர்பான்’ (1967) என்ற பெயரில் ரீமேக் ஆனது. தமிழில் இயக்கிய பீம்சிங் இந்தியிலும் இயக்கினார். அசோக்குமார், சுனில்தத் நடித்த இதை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது.

1960-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான ‘படிக்காத மேதை’ சிவாஜியின் நடிப்புக்காகவும் சிறந்த பாடல்களுக்காகவும் இன்றளவும் பேசப்படுகிறது.

SCROLL FOR NEXT