தமிழ் சினிமா

பவதாரிணியின் குரலில் ‘தி கோட்’ பாடல்: ஏஐ மூலம் சாத்தியமானது எப்படி?

செய்திப்பிரிவு

சென்னை: விஜய்யின் ‘தி கோட்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலை அண்மையில் படக்குழு வெளியிட்டது. இதில் மறைந்த பாடகர் பவதாரிணியின் குரல் ஏஐ மூலம் உயிரூட்டப்பட்டுள்ளது. இது சாத்தியமானது எப்படி என்பது குறித்து தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 68-வது படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் அண்மையில் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் பாடலில் மறைந்த பாடகர் பவதாரிணியின் குரல் ‘ஏஐ’ தொழில்நுட்பம் மூலம் மறுஉருவாக்கம் செய்யப்பட்டதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்திருந்தார்.

சாத்தியமானது எப்படி? - இதனை சாத்தியப்படுத்தியவர் கிருஷ்ண சேத்தன். இவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இசைக்கோர்வை பொறியாளராக பணியாற்றி வருகிறார். ‘டைம்லெஸ் வாய்சஸ்’ என்ற ஸ்டார்அப் நிறுவனத்தை நடத்தி வரும் இவர், இந்த நிறுவனத்தின் மூலம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பவதாரிணியின் குரலை உயிர்ப்பித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான ‘லால் சலாம்’ படத்தில் மறைந்த பாடகர்கள் சாகுல் ஹமீது மற்றும் பம்பா பாக்யா ஆகியோரின் குரல்கள், ‘திமிறி எழுடா’ பாடலில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கும். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கிருஷ்ணன் சேத்தனுடன் இணைந்து இதனை உருவாக்கியிருந்தார்.

இந்தப் பாடலைக் கேட்ட யுவன் ஷங்கர் ராஜா, ‘தி கோட்’ திரைப்படத்தில் ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலுக்காக பவதாரிணியின் குரலை பயன்படுத்த விரும்பி கிருஷ்ண சேத்தனை அணுகியுள்ளார். இதற்காக மறைந்த பாடகர் பவதாரிணியின் குரல் மாதிரிகளை யுவன் அலுவலகத்தில் இருந்து பெற்ற கிருஷ்ண சேத்தன், 3 நாட்களில் ஏஐ உதவியுடன் பவதாரிணியின் குரலை ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலுக்காக உருவாக்கி கொடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய கிருஷ்ண சேத்தன், “மறைந்த பாடகர் பவதாரிணி குரல் மிகவும் விசேஷமானது, தனித்தன்மை மிக்கது. அதை மீண்டும் உயிர்ப்பிக்கும் வாய்ப்பை அளித்த யுவன் ஷங்கர் ராஜாவுக்கு நன்றி. இந்த பாடலைக் கேட்டு யுவன் ஷங்கர் ராஜா, இயக்குநர் வெங்கட் பிரபு மகிழ்ச்சி தெரிவித்தனர். இளையராஜாவையும் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.

பாடகர்கள் மற்றும் நடிகர்களின் குரலைப் பாதுகாத்து செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் தேவைக்கேற்ப அதை சரியான முறையில் பயன்படுத்துவதே எங்கள் நிறுவனத்தின் நோக்கமாகும். ஏ.ஆர்.ரஹ்மானிடம் இந்த யோசனையை நாங்கள் முன்வைத்த போது அவர் அதை வரவேற்றார். இதைத் தொடர்ந்து ‘திமிறி எழுடா’ பாடலுக்கு பம்பா பாக்யா மற்றும் ஷாஹுல் ஹமீதின் குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கி அவர்களது குரலை பயன்படுத்தினோம். இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது” என்றார்.

மேலும், “குரல்களை செயற்கை தொழில்நுட்பம் மூலம் பிரதியெடுத்து நாங்கள் பயன்படுத்துகிறோம். இதன் மூலம், பிரபல பாடகர்கள் முதல் இளம் பாடகர்கள் வரை பயனடைய முடியும். பாடகர்கள் தங்கள் குரலை என்றென்றும் பாதுகாக்க முடியும்.பிரபல நடிகர்கள் மிகவும் சுலபமாக பல மொழிகளில் டப்பிங் பேச முடியும்” என்றார்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்துக்காக மறைந்த நடிகர்கள் விவேக் மற்றும் மனோபாலா ஆகியோரின் குரல்களை பயன்படுத்தும் பணியில் கிருஷ்ண சேத்தன் குழுவினர் ஈடுப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT