தமிழ் சினிமா

வளரும் படங்கள்

ரஞ்சனி

1 பந்து 4 ரன் 1 விக்கெட்

‘1 பந்து 4 ரன் 1 விக்கெட்’ என்று பரபரப்பான கிரிக்கெட் போட்டியின் க்ளைமேக்ஸைப் போன்ற தலைப்புடன் ஒரு படத்தை இயக்கிவருகிறார் அறிமுக இயக்குநர் வீரா. புதுமுக நாயகனான வினய் கிருஷ்ணாவும், நாயகி ஹாஷிகா தத்தும் நடிக்கும் இப்படத்தில் ‘லொள்ளு சபா’ ஜீவா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தைப் பற்றி இயக்குநர் வீரா கூறும்போது, “கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் ஒரு நகைச்சுவை படம்தான் ‘1 பந்து 4 ரன் 1 விக்கெட்’. இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் கடைசி ஓவரின் கடைசி பந்தில் 4 ரன்களை எடுக்கவேண்டியுள்ளது. விக்கெட்டை பறிகொடுத்தால் தோல்வி என்ற நிலை. அந்த சமயத்தில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. அத்துடன் நகைச்சுவைக்காக ஒரு பேயையும் இப்படத்தில் சேர்த்திருக்கிறேன். பேய்ப் படம் என்றவுடன் ரொம்ப பயமுறுத்துவார்களோ என்று நினைத்து விடாதீர்கள். இந்த பேய் சைவமான பேய்” என்றார்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

‘ரூ’

‘சுண்டாட்டம்’ ‘பட்டாளம்’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்த இர்ஃபான் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘ரூ’. புதுமுகம் ரக்‌ஷிதா நாயகியாக நடித்துவரும் இப்படத்தை சதாசிவம் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, குஜராத், பெங்களூரு, காசி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

“தமிழில் ‘ரூ’ என்றால் ‘ஐந்து’ என்று அர்த்தம். இந்த படத்தில் ஐந்து வில்லன்கள், அதை குறிப்பதுதான் ‘ரூ’. சமூகத்திற்கு தீமை செய்துவரும் இந்த ஐந்து வில்லன்களையும் கதாநாயகன் எப்படி அடக்குகிறான் என்பதுதான் இப்படத்தின் கதை. இது ஆக்‌ஷன் படமாக இருந்தாலும், நகைச்சுவை காட்சிகளும் நிறைய உள்ளன” என்கிறார் இப்படத்தின் இயக்குநர் சதாசிவம்.

நண்பர்கள் நற்பணி மன்றம்

‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தின் மூலம் நடிகர் பிரசாந்தை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் ராதா பாரதி இயக்கும் படம் ‘நண்பர்கள் நற்பணி மன்றம்’. இப்படத்தில் நாயகனாக புதுமுகம் ஜெய்நாத்தும் நாயகியாக அக்‌ஷயாவும் நடித்துள்ளனர்.

‘ஆடுகளம்’ நரேன், இமான் அண்ணாச்சி, ராதா, சிங்கம் புலி உட்பட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு காந்த் தேவா இசையமைக்கிறார். சென்னை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் 42 நாட்களில் முழுப்படத்தையும் முடித்துள்ளனர்.

இப்படம் குறித்து இயக்குநரிடம் கேட்டபோது, “ஒரு கிராமத்தில் உள்ள இளைஞர்கள் சிலர் மக்களின் நலனுக்காக ஒரு நற்பணி மன்றத்தை தொடங்குகிறார்கள். அவர்கள் செய்யும் ஆக்கபூர்வமான பணிகளைப் பார்க்கும் கதாநாயகி

கதாநாயகனின் மீது காதல் கொள்கிறாள். இவர்களது காதலுக்கு வரும் சங்கடங்களும் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதும்தான் இக்கதையின் மையக்கரு” என்றார்.

வலியுடன் ஒரு காதல்

கிராமத்துப் பின்னணியில் ஒரு காதல் கதையைச் சொல்லும் படம் ‘வலியுடன் ஒரு காதல்’. இப்படத்தின் நாயகனாக புதுமுகம் ராஜேஷும், நாயகியாக கவுரி நம்பியாரும் நடிக்கிறார்கள்.

இப்படம் குறித்து இயக்குநர் சஞ்சீவன் கூறும்போது, “வேலை ஏதும் இல்லாமல் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் கதா நாயகனுக்கும், பண்ணையாரின் மகளுக்கும் இடையிலான காதலை மையமாக கொண்ட படம் இது. படம் பார்க்கும் யாருமே யூகிக்க முடியாத அளவுக்கு திகைப்பூட்டும் விதமாக இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை அமைத்துள்ளோம்” என்றார்.

‘மாதாஸ் பிளஸ்ஸிங் ஸ்டூடியோ’ தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

SCROLL FOR NEXT