தமிழ் சினிமா

‘காமெடி கிங்’ கவுண்டமணிக்கு ஹேப்பி பர்த்டே!

வி. ராம்ஜி

எத்தனை சந்தோஷங்கள் இருந்தாலென்ன... திடீரென காற்றுப்போன பலூனாய்ச் சுருங்கிவிடுகிற சாமான்யர்கள்தானே நாம். அப்படியான, வேதனையும் கவலையும் மண்டியிருக்கிற வேளையில், ‘என்ன உலகம்டா இது’ என்று அலுப்பும் சலிப்புமாகத் தவித்துக் கிடக்கிற தருணத்தில்... நமக்காக உடனடி நிவாரணியாக இருக்கவே இருக்கிறார் கவுண்டமணி. செந்திலை மட்டுமல்ல... இவற்றையெல்லாம் அடித்துவிரட்டி ஆனந்தப்படுத்துவதில் கவுண்டமணி சூரர்தான்.

ஆரம்பகட்டத்தில் கவுண்டன்மணி என்று டைட்டிலில் பத்தோடு பதினொன்றாகப் பெயர் போடுவார்கள். பிறகு கவுண்டமணி என்று தனியே போடுகிற அளவுக்கும், அப்படிப் போடும்போது மிகப்பெரிய கைத்தட்டலைப் பெறுகிற அளவுக்கும் வந்தார் கவுண்டமணி.

ஒரு ஹீரோவுக்கு, கைத்தட்டல் தடால் தடாலென்று கிடைத்துவிடும். கதாநாயகியுடன் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு, ஆயிரம் பேரை அடித்து வீழ்த்தி, ‘எங்க ஐயா எவ்ளோ வல்லவரு, நல்லவரு தெரியுமா?’ என்று யாரோ பேசுகிற வசனத்தில் இருந்து, ஹீரோவானவர் நம் மனதில் நின்றுவிடுவார். ஆனால், காமெடி நடிகர்களுக்கு எந்த மந்திரமும் கிடையாது; தந்திரமும் கிடையாது. அவர்கள் காமெடியால் சிரிக்கச் செய்து, காமெடியால் கைத்தட்டு வாங்கி, காமெடியால் பேர் பெற்று, காமெடியால் புகழடைந்து, காமெடியால் மக்கள் மனங்களிலும் இடம்பிடிக்க வேண்டும். எழுபதுகளின் இறுதி தொடங்கி இன்றுவரை கவுண்டமணிக்கு என தங்கள் மனதில் தனியிடம் கொடுத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவருடைய ரசிகர்கள். ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ என்று கவுண்டமணியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

‘பத்த வெச்சிட்டியே பரட்டை’ என்பார் கவுண்டமணி. ‘என்ன கூத்து கிண்டலா?’ என்பார் ரஜினி. அன்றில் இருந்துதான் சகட்டு மேனிக்குத் தன் ஸ்டைலில் கேலி செய்து, கிண்டலடித்து கைத்தட்டல்களை வாங்கிக் கொண்டிருக்கிறார் கவுண்டமணி.

‘புதிய வார்ப்புகள்’ படத்தில், அமாவாசை எனும் கேரக்டரில் பின்னியிருப்பார். அமாவாசை கதாபாத்திரம் தந்த வெளிச்சம்... இன்றைக்கும் நகைச்சுவை உலகில் பூரண பவுர்ணமியாய் தனியிடம் பிடித்திருக்கிறார்.

ஆர்.சுந்தர்ராஜனுக்கும் கவுண்டமணிக்கும் பத்துப் பொருத்தங்கள் சேர்ந்தது போல, இந்த ஜோடி காமெடியில் புகுந்து விளையாடினர். ‘பயணங்கள் முடிவதில்லை’படத்தில் ‘இந்த சென்னை மாநகரத்திலே’, ‘நான் பாடும் பாடல்’ படத்தில் ‘கிடா வெட்டுவீங்களா?’, ‘உதயகீதம்’ திருடன், ‘இதயக்கோயில்’ பாடகர், ‘வைதேகி காத்திருந்தாள்’ சைக்கிள் கடைக்காரர், ‘கன்னிராசி’யின் பிரபுவின் அக்காள் கணவர், ‘சின்னதம்பி’யில் குஷ்பு வீட்டு வேலையாள், ‘சிங்காரவேல’னில் கமலின் நண்பர்களில் ஒருவர், ‘மன்னனி’ல் ரஜினியுடன் தொழிற்சாலை ஊழியர், ‘சூரியனி’ல் அரசியல்வாதி, ‘ஜென்டில்மேனி’ல் அர்ஜுனுடன் சேர்ந்து கொள்ளையடிப்பவர், ‘இந்தியனி’ல் ஆர்டிஓ ஆபீஸ் புரோக்கர், பார்த்திபனுடன் ‘டாட்டா பிர்லா’, கார்த்திக்குடன் ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘மேட்டுக்குடி’, சத்யராஜுடன் கணக்கிலடங்கா படங்கள், இந்தப் பக்கம் விஜயகாந்த், அந்தப் பக்கம் பிரபு, நடுவே ஜெயராமுடன் கூட்டணி, திடீரென்று அஜித்துடன், அப்புறம் விஜய்யுடன்... ஆனால், எப்போதும் செந்திலுடன் என்று மிகப்பெரிய ரவுண்டு, நம்மை ரவுண்டுகட்டி சிரிக்க வைப்பதில் வில்லாதிவில்லன் கவுண்டமணி.

கவுண்டமணி நடிக்கும் படமென்றால், அங்கே ஜாலிக்கும் கேலிக்கும் அளவே இருக்காது. தபதபவென வார்த்தைகள் வந்து சீனிப்பட்டாசாய் வெடித்துக்கொண்டே இருக்கும். இன்னொரு பிரச்சினை, அவர் பாட்டுக்கு முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு காமெடி பண்ணிவிடுவார். ஷூட்டிங்கில் உள்ள இயக்குநர் தொடங்கி லைட்மேன் வரைக்கும் ‘களுக்’கென சிரித்து, பிறகு அடக்கமாட்டாமல் வாய்விட்டுச் சிரித்து, ரீடேக் வாங்கச் செய்துவிடுவார்கள்.

வி.சேகர், மணிவண்ணன் படங்கள் என்றால் கவுண்டமணிக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. இவருக்கு விதம்விதமாய் கேரக்டர் கொடுத்து, உருமாற்றிப் பார்த்து, ரசித்து ரசித்துப் பார்த்து, நம்மையும் ரசிக்கச் செய்துவிடுவார்கள்.

கவுண்டமணி பேசும் இங்கிலீஷ், காமெடியில் இன்னும் வேற லெவல். அதேபோல், அர்ஜுனுடன் இவர் சேர்ந்து செய்யும் கலாட்டாக்கள் எல்லாமே மொறுமொறு, விறுவிறு காமெடி ரகம்தான். எப்போதும் அடிவாங்கிக் கொண்டிருக்கும் செந்தில், கனவில் வந்து டார்ச்சர் கொடுக்கிற ஜெய்ஹிந்த் இன்றளவும் பிரபலம். அதேபோல், ஆர்டிஓ ஆபீஸ் வாசலில் கவுண்டமணி, உள்ளே ஆபீஸராக செந்தில், ‘சொல்லுங்க ஆபீஸர், வணக்கம் ஆபீஸர்...’ என்று குனிந்து, வளைந்து கவுண்டமணி பேசுகிற வசனங்களில், தியேட்டர் ஆபரேட்டரே அப்போது கார்பனை நகர்த்த மறந்து கைத்தட்டிக் கொண்டிருப்பார்.

கவுண்டமணியும் சரி, அவரின் காமெடிகளும் சரி... புதுசு, புது தினுசு. அதனால்தான் அவர் நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருக்கிற இந்தவேளையில் கூட, அவருக்கென இருக்கிறது தனி மவுசு!

இன்று (மே 25) கவுண்டமணிக்குப் பிறந்தநாள். இன்னும் இன்னும் ஆரோக்கியத்துடன் வாழ, கவுண்டமணி எனும் காமெடி நாயகனை மனதார வாழ்த்துவோம்!

புது ஹீரோயின்களுடன் மட்டுமே நடிக்க என்ன காரணம்? - விஜய் ஆண்டனி விளக்கம்

SCROLL FOR NEXT