தமிழ் சினிமா

தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் முதல் ‘விஜய் 62’ வரை: ‘நாச்சியார்’வில்லன் தங்கமணி பிரபு நேர்காணல்

செய்திப்பிரிவு

நா

ன் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். கிராபிக்ஸ்ல இருந்து போட்டோகிராபி, ப்ளே ஸ்கிரீனிங் எல்லாம் அத்துபடி.. இப்படி எனக்கு நானே அறிமுகப்படுத்திக்கொண்ட காலம் மாறி, ‘நாச்சியார் பட வில்லன்’ என்பது எனக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்திருக்கு. அந்த விறுவிறுப்போட, ‘விஜய் 62’ படத்தின் ஷூட்டிங்கும் முடிச்சாச்சு. இந்த அறிமுகங்கள் எனக்கு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்குது.. ஒரு தேர்ந்த நடிகனாக எல்லோரது பார்வையும் என் மீது விழுகிற இந்த காலகட்டத்துக்காகத்தான் காத்திருந்தேன் என்கிறார் தங்கமணி பிரபு.

‘தரமணி’, ‘பைரவா’ படங்களில் சிறு சிறு பாத்திரங்கள், பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான ‘நாச்சியார்’ படம் தந்த வில்லன் அங்கீகாரம், அடுத்தடுத்து புதுப்புது படங்கள் என்று பிஸியாக வலம் வரும் தங்கமணி பிரபுவுடன் ஒரு நேர்காணல்..

அடிப்படையில் தியேட்டர் ஆர்ட்டிஸ்டான நீங்கள் இயக்கம், டப்பிங்னு கவனம் செலுத்தியது ஏன்?

படிச்சது இன்ஜினீயரிங் துறை என்றாலும், சிறு வயதில் இருந்தே வாசிப்பு மீது எனக்கு அலாதியான காதல் உண்டு. பள்ளி நாட்களிலேயே நாடகங்கள் எழுதுற ஆர்வமும் இருந்தது. கல்லூரி போனதும் ஈடுபாடு அதிகமாச்சு. தென்னிந்தியாவில் ‘நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா’ நடத்தின நாடகப் பட்டறையில் சேர்ந்தேன். எதையும் தொட்டோம், வந்தோம்கிற மனநிலை எனக்கு கிடையாது. எதுவா இருந்தாலும் முழுசா இறங்கிப் பார்த்துடணும்னு நினைக்கிறவன் நான். அடிப்படையில் எழுத்துங்கிற விஷயம் கையில இருந்துச்சு. அந்த அடையாளத்தோட டிராமா ஸ்கூல்ல பயிற்சி எடுத்துக்கிட்டதாலே ப்ளே ஸ்கிரீனிங், கிராபிக்ஸ், மாஸ் மேக்கிங், போட்டோஷாப்னு எதையும் விட்டுவைக்கலை. அப்படித்தான் கடந்த 20 ஆண்டுகளாக சின்னத்திரை நிகழ்ச்சி, விளம்பரப் படங்கள், போட்டோகிராபி, கிராபிக்ஸ், இயக்கம் வரைக்கும் நிறைய அனுபவங்கள் இருக்கு. இப்போ முழு நேர நடிகன் என்கிற அங்கியைப் போட்டிருக்கேன். என் பழைய அனுபவங்கள் இதுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கு.

சின்னத்திரை, விளம்பரப் படங்களில் உங்கள் பங்களிப்பு என்ன?

சென்னை வந்ததும் சன் டிவியில் வேலை கிடைச்சுது. அப்போ ‘நம்ம நேரம்’னு ஒரு நிகழ்ச்சி. 90 எபிஸோட் வரைக்கும் வேலை பார்த்ததும், அந்த நிகழ்ச்சியை இயக்கும் வாய்ப்பு கிடைச்சுது. வித்தியாசமா பல முயற்சிகள் செய்து பாராட்டு பெற்றேன். ரமேஷ் பிரபா வழங்கின பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் வேலை பார்த்திருக்கேன். கே டிவியில், ‘எப்படி ஜெயித்தார்கள்’னு ஒரு ஷோ. முதல் தலைமுறை சினிமா கலைஞர்களை வைத்து எடுக்கப்பட்ட நிகழ்ச்சி. என் சின்னத்திரை பயணத்தில் அது ஒரு மைல் கல். அப்புறம், திருச்செல்வத்தின் ‘கோலங்கள்’ தொடரில் அசோசியேட். திரைப்பட இயக்குநர் பி.வாசுவிடம் உதவியாளராகவும் வேலை பார்த்திருக்கேன். அவர் தமிழில் இயக்கிய ‘காதல் கிசுகிசு’, கன்னடத்தில் இயக்கிய ‘ஹிருதயவந்தா’ படத்துலயும் வேலை பார்த்தேன். சந்திரமுகியின் கன்னட படைப்பான ‘ஆப்தமித்ரா’வில் ஆரம்ப கட்டத்தில் பணியாற்றினேன். இப்படியான அனுபவங்கள், நிறைய விளம்பரப் படங்கள் எடுக்குற சூழலை உருவாக்கிக் கொடுத்துச்சு. இயல்பாகவே கத்துக்குற ஆர்வம் எனக்கு அதிகம். நிறைய கிரியேட்டர்களை சந்திச்சிக்கிட்டே இருக்கணும். ஏதாச்சும் புதுமையா செய்துக்கிட்டே இருக்கணும்னு விரும்புவேன். ஒரு கிரியேட்டருக்கு அதுதானே வேலை.

‘நாச்சியார்’ பட வாய்ப்பு எப்படி அமைந்தது?

‘தரமணி’, ‘பைரவா’ படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்ற பிறகு, தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தலாம் என்ற யோசனையில் இருந்த நேரம். நண்பர் தேனி ஈஸ்வர்தான் ‘நாச்சியார்’ பட ஒளிப்பதிவாளர். ஒருநாள், ‘இயக்குநர் பாலாவின் ஆபீஸுக்கு போங்க’ன்னு என்னை அனுப்பி வைத்தார். பாலா என்னைப் பார்த்ததும், ‘நிறைய அடிபடுமே.. நெகடிவ் ரோல் பண்ணுவீங்களா’னு கேட்டார். நான் கொஞ்சமும் தயங்காம, ‘ஓ.கே. சார். பண்றேன்’ என்றேன். அவ்வளவுதான் எங்க ரெண்டு பேருக்குமான உரையாடல். உடனே உதவியாளரைக் கூப்பிட்டு காஸ்ட்யூம்ஸ், தாடி உள்ளிட்ட விஷயங்களை நோட் பண்ணிக்கச் சொன்னார். இவ்ளோ நீளமான கதாபாத்திரம், இந்த அளவுக்கு பெயர் வாங்கிக் கொடுக்குற கதாபாத்திரம்னு அப்போ நான் எதிர்பார்க்கல.

‘விஜய் 62’ படம் பற்றி?

சின்ன கதாபாத்திரம்தான். இருந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்ததா இருக்கும். விஜய்கூட வர்ற மாதிரி என் பகுதி இருக்கும். என் பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. முருகதாஸ் போன்ற இயக்குநர்களிடம் ஒரு நடிகனாகவோ, உதவியாளனாகவோ இருப்பதே சுகம்தான். அப்படிப்பட்ட மனிதர். அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

வில்லன், குணச்சித்திர கதாபாத்திரத்துக்கான வாய்ப்புகள் இங்கு சீக்கிரம் அமையுமே?

ஒரு படம் 200 முதல் 250 பேரை சார்ந்து இருக்கக்கூடியது. பெரிய கதாபாத்திரங்களேகூட திடீரென மாறிவிடக்கூடிய சூழல் உண்டு. சிறு பாத்திரங்கள் என்றால் படப்பிடிப்புக்கு போகும் வரை உறுதி இல்லை. வெள்ளித்திரையில் வரும் வரை அதுவேகூட நிச்சயம் இல்லை. ‘தில்லுமுல்லு 2’ படத்தில் கமிட் ஆனேன். கடைசி நேரத்தில், அதை ஒரு பெண் கதாபாத்திரமாக மாற்றி எழுதிவிட்டார்கள். ‘காஞ்சனா’ படத்திலும் இதேபோலத்தான். எனவே, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் கிடைப்பதுகூட இங்கு அவ்வளவு எளிது அல்ல. இப்படி பல விஷயங்களைக் கடந்துதான், பல நல்ல கதாபாத்திரங்களுக்காக பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

SCROLL FOR NEXT