தமிழ் சினிமா

தயாரிப்பாளர் சங்கப் பேரணிக்கு அனுமதி மறுப்பு?

அபராசிதன்

பேரணியாக வந்து மனு கொடுக்க அனுமதி கேட்ட தயாரிப்பாளர் சங்கத்துக்கு, தமிழக அரசு அனுமதி மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

தமிழ் சினிமாவை ஒழுங்குபடுத்தவும், சினிமாவுக்கென தனி வாரியம் அமைக்கக் கோரியும், டிஜிட்டல் கட்டணத்துக்கு எதிராகவும் கடந்த மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து தயாரிப்பாளர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால், புதிய படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை. மேலும், படப்பிடிப்புகளும் நடைபெறாமல் தமிழ் சினிமா முடங்கியுள்ளது.

இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டால் தான் சுமுகமான முடிவு கிடைக்கும் என தயாரிப்பாளர் சங்கம் திட்டவட்டமாக நம்புகிறது. எனவே, பேரணியாகச் சென்று முதல்வரிடம் மனு அளிக்க திட்டமிட்டனர். தயாரிப்பாளர் சங்கம் மட்டுமின்றி, ஃபெப்சி உள்ளிட்ட சினிமாவைச் சார்ந்த வேறு சில அமைப்புகளும் இந்தப் பேரணியில் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டது.

புதன்கிழமை பேரணி நடத்தவும், முதல்வரைச் சந்திக்கவும் அனுமதி கேட்டு தமிழக அரசிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், பேரணிக்கு தமிழக அரசு மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

தயாரிப்பாளர் சங்கத்தை அமைதிப்படுத்துவதற்காக, ‘தேவைப்பட்டால் திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும்’ என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அவர், தேவைப்பட்டால் தான் தனி வாரியம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனால், ‘வாரியம் அமைக்கப்படும் என்று உறுதியளித்த அமைச்சருக்கு நன்றி’ என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் நன்றி கூறியுள்ளார். ஆக, அமைச்சரின் இந்தப் பதிலிலேயே சமாதானம் ஆகியுள்ள தயாரிப்பாளர் சங்கம், பேரணி நடத்துவதில் இருந்து பின்வாங்கியுள்ளது.

SCROLL FOR NEXT