தமிழ் சினிமா

அரசியல் நெடியுடன் அதிகார மோதல் - விஜய்குமாரின் ‘எலக்சன்’ ட்ரெய்லர் எப்படி?

செய்திப்பிரிவு

சென்னை: விஜய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘எலக்சன்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலை மையப்படுத்தி உருவாகியுள்ள ட்ரெய்லர் காட்சிகள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

‘உறியடி’, ‘பைட் கிளப்’ படங்களில் நடித்த விஜய்குமார் அடுத்து நடிக்கும் படம் ‘எலக்சன்’. இதை ‘சேத்துமான்’ பட இயக்குநர் தமிழ் இயக்கியுள்ளார். பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, திலீபன், பாவல் நவகீதன், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்தப் படத்துக்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இதை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆதித்யா தயாரித்துள்ளார். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - “கட்சிக்காரனுக்கு அடையாளமே கரவேஷ்டியும் துண்டும் தான்” என்ற ஜார்ஜ் மரியானின் வசனத்துடன் தொடங்குகிறது ட்ரெய்லர். அரசியலில் கட்சியின் அடிப்படை தொண்டனின் முக்கியத்துவம் குறித்து படம் பேசும் என தெரிகிறது. கட்சியின் அடிப்படை தொண்டனாக இருக்கும் ஜார்ஜ் மரியானின் மகனான விஜய்குமார் தேர்தலில் போட்டியிடுகிறார்.

“மக்கள், தலைவன் மகன சப்போர்ட் பண்றாங்களா, தொண்டன் மகன சப்போர்ட் பண்றாங்களா பாப்போம்” என்ற வசனம் மூலம் இளம் தலைமுறைகளின் அரசியல் மோதலை படம் பேசுகிறது. சண்டை, கரைவேஷ்டி, வாக்குப்பதிவு, பிரச்சாரம் என காட்சிகள் விறுவிறுப்பாக நகர்கின்றன. படம் மே 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ட்ரெய்லர் வீடியோ:

SCROLL FOR NEXT