விஜய் ஆண்டனி நடித்த ‘இந்தியா பாகிஸ்தான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆனந்த். அவர் இப்போதுதனது பெயரை, ஆனந்த் நாராயண் என்று மாற்றிஇயக்கியுள்ள படம், ‘இங்க நான்தான் கிங்கு’. சந்தானம் ஹீரோவாக நடிக்கும் இதில் அவர் ஜோடியாக, புதுமுகம் பிரியாலயா நடித்திருக்கிறார். வரும் 10-ம் தேதி வெளியாகும் இந்தப் படம் பற்றி ஆனந்த் நாராயணிடம் பேசினோம்.
‘இந்தியா- பாகிஸ்தான்’ சிறந்த காமெடி படம். அடுத்தப் படத்துக்கு ஏன் இவ்வளவு இடைவெளி?
அந்தப் படத்துக்குப் பிறகு, ஒரு வரலாற்றுக் கதையை பண்ணலாம்னு திட்டம். ஒரு தயாரிப்பாளர் தயாரிக்க முன் வந்தார். நல்ல கதை, பெரியபட்ஜெட். எல்லாம் ரெடியான நேரத்துல கரோனா வந்து எல்லோரையும் கலங்கடிச்சிடுச்சி. அதனால அந்த புராஜெக்ட்டை தொடர முடியலை.
இந்த வாய்ப்பு எப்படி கிடைச்சது?
நான் எல்லாத்தையும் பாசிட்டிவா பார்க்கிறவன். அந்த புராஜெக்ட் தள்ளிப் போனதை நல்லதுக்குத்தான்னு நினைச்சுட்டு அடுத்த முயற்சியில இருந்தேன். தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் சார்ட்ட தொடர்ந்து பேசிட்டு இருந்தேன். அப்ப, அவங்க எழிச்சூர் அரவிந்தன் எழுதிய கதையை வாங்கி வச்சிருந்தாங்க. அவர் ஏற்கெனவே சில ஹிட் படங்கள்ல அருமையா எழுதியிருந்தார். இந்தக் கதைக்கு சந்தானம் சார், ஹீரோவா ஓகே ஆயிருந்தார். அப்ப, காமெடி ஸ்கிரிப்ட்டை இயக்கறதுக்கான டைரக்டரை தேடிட்டு இருந்தாங்க. என்னைக் கேட்டாங்க. சரின்னேன். ஆரம்பிச்சாச்சு.
முழு காமெடிதான் படமா?
இது ஃபேமிலி என்டர்டெயினர் படம். ஒரு நல்ல வாழ்க்கைக்கு காத்துட்டு இருக்கிற ஹீரோவுக்கு அவர் நினைக்கிற மாதிரி பொண்ணு கிடைச்சுதா? இல்லையா? அதனால என்ன பிரச்சினைகளை அவர் சந்திக்கிறார்னு கதை போகும். காதல்,காமெடி, ஆக்ஷனோட எமோஷனல் விஷயங்களும் கதையில இருக்கும். சந்தானம், ஒரு மேட்ரிமோனியல் நிறுவனத்துல வேலை பார்க்கிறவரா வர்றார். அவரை முழு ஹீரோவா இதுல பார்க்கலாம். அவர் காமெடி பண்ணுவார் அப்படின்னாலும் அது கதையோட சேர்ந்துதான் இருக்கும். பக்காவான கமர்சியல் படம்.
ஹீரோயின் பிரியாலயா சோசியல் மீடியாவுல பிரபலமானவர்னு சொல்றாங்களே?
தமிழ்ப் பொண்ணுதான். சாஃப்ட்வேர் என்ஜினீயர். அவங்க போடுற ரீல்ஸ், கன்னா பின்னான்னு போகும். அதுல அவங்க பிரபலம். சிறந்த நடனக் கலைஞர். நாட்டிய பள்ளி நடத்திட்டுவர்றாங்க. ரீல்ஸ் பார்த்துட்டுதான் அழைச்சு ஆடிஷன் பண்ணினோம். இந்தக் கேரக்டருக்கு சரியா பொருந்தினாங்க. ஒரு புதுமுக நடிகை மாதிரி இல்லாம நல்லா நடிச்சிருக்காங்க.
வழக்கமா சந்தானம் படம்னா, ‘லொள்ளு சபா’ நடிகர்கள் இருப்பாங்களே?
இதுலயும் இருக்காங்க. சமீபத்தில் மறைந்த சேஷு, கூல் சுரேஷ், மாறன், சுவாமிநாதன் இருந்தாலும் புது காம்பினேஷனும் இருக்கு. தம்பி ராமையா, முனீஷ்காந்த், பால சரவணன், விவேக்பிரசன்னா இவங்களும் அதுல இணைஞ்சிருக்காங்க. எல்லோரும் பண்ற காமெடி ரகளையா இருக்கும்.
இந்தப் படத்தோட ஒளிப்பதிவாளர் ஓம் நாராயண், உங்க சகோதரர்தான். ஒரு 5 நிமிட காட்சியை, கேமராவை தோள்ல சுமந்துகிட்டே படமாக்கியதா சொன்னாங்களே?
அது ஒரு முக்கியமான காட்சி. படத்துல ஒரு 5 நிமிஷம் வரும். ஆனா, அதை நாலு மணி நேரம் ஷுட் பண்ணினோம். அவ்வளவு நேரம் கேமராவைகையில தூக்கிக்கிட்டே எடுக்கறேன்னு ஓம் நாராயண் எடுத்தார். அதுல ரொம்ப இம்ப்ரஸ் ஆனது சந்தானம் சார்தான். இதுக்கு பிறகு அவர் எங்களை ரொம்ப கவனிச்சுக்கிட்டார்.
டி.இமான் இசையை பற்றி?
இந்த படத்துல காமெடி மட்டுமே இல்லை. காதல், எமோஷனல் விஷயங்களும் இருக்கறதால இசைக்கு முக்கியத்துவம் இருக்கு. அதனால தயாரிப்பு தரப்புல, இமான் சார் பண்ணினா நல்லாயிருக்கும்னு சொன்னாங்க. சந்தானம் சாரும் இமானும் சேர்ந்து படம் பண்ணலைன்னு சொன்னாங்க. அது இந்தப் படம் மூலம் நிறைவேறியிருக்கு. பாடல்கள்லயும் பின்னணி இசையிலயும் அருமையா பண்ணியிருக்கார்.