தமிழ் சினிமா

‘அரண்மனை 4’ கதை கேட்காமல் ஒப்புக்கொண்டேன்: ராஷி கன்னா

செய்திப்பிரிவு

சென்னை: சுந்தர். சி. இயக்கத்தில் உருவான ‘அரண்மனை’ படத்தின் முதல் பாகம் 2014-ம் ஆண்டு வெளியானது. 2-ம் பாகம் 2016, 3-ம் பாகம் 2021-ல் வெளியானது. இப்போது உருவாகியுள்ள இதன் 4-ம் பாகம் மே 3-ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாகிறது. தெலுங்கில் ‘பாக்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் சுந்தர்.சி, தமன்னா, ராஷி கன்னா, ராமச்சந்திர ராஜு, கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு ஹைதராபாத்தில் நடந்தது. அப்போது பேசிய ராஷி கன்னா, “இந்த ஹாரர் காமெடி படத்துக்கு இயக்குநர் சுந்தர்.சி., என்னிடம் கேட்டபோது, கதையை கூட கேட்காமல், உடனே நடிக்கிறேன் என்றேன். இந்த வெற்றிகரமான ‘அரண்மனை’ பட வரிசையில் நானும் இருக்க வேண்டும் என நினைத்தேன். எனக்கு ஹாரர் படங்களின் மீது அதிக விருப்பம் உண்டு. இதுபோன்ற படங்களுக்கு முன் தயாரிப்பு பணியும் படப்பிடிப்பு முடிந்தபின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் அதிகம். இதில் தமன்னா அருமையாக நடித்திருக்கிறார். அவருடன் நடித்ததில் சிறந்த அனுபவம் கிடைத்தது. காமெடி காட்சிகளில் நடிப்பது சிரமம். கோவை சரளாவுடன் அதுபோன்ற காட்சியில் நடித்தது, சிறப்பாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT