தான் எழுதிய பல நாடகங்களைத் திரைப்படமாக்கி இருக்கிறார், சோ. அதில் ஒன்று, ‘உண்மையே உன் விலை என்ன?’. ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்த நாடகத்தை, சோ இயக்கி நடித்தார்.
முத்துராமன், விஜயகுமார், அசோகன், ஸ்ரீகாந்த், வி.கே.ராமசாமி, தேங்காய் சீனிவாசன், பத்மப் பிரியா, சகுந்தலா, மனோரமா, சுகுமாரி, நீலு உட்பட பலர் நடித்தனர்.
லேடிஸ் கிளப்புக்கு நன்கொடை தருவதாக அதன் தலைவியை வீட்டுக்கு அழைக்கும் பணக்கார இளைஞர், அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயற்சிக்கிறார். அந்தப் பெண்ணை அழைத்து வந்த வாடகை கார் ஓட்டுநர், அவரைக் காப்பாற்றும் முயற்சியில் பணக்கார இளைஞனை கொன்றுவிடுகிறார். தேவாலயத்தில் பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்டுவிட்டு சரணடைய நினைக்கிறார் கார் ஓட்டுநர். ஆனால் பாதிரியார், ‘நீ செய்தது தவறில்லை’ என்று கூறி அவரை மறைத்து வைக்கிறார். தன் மகனைக் கொன்றவன் தூக்கில் தொங்க வேண்டும் என்று துடிக்கிறார், பணக்காரத் தந்தை. பாதிக்கப்பட்டப் பெண்ணையும் அவள் குடும்பத்தையும் பணத்தால் விலைக்கு வாங்குகிறார் அவர். பிறகு நீதிமன்றத்தில் உண்மையை நிலைநிறுத்த என்ன பாடுபட வேண்டியிருக்கிறது என்பது கதை.
சோ, சத்யநாராயணா என்ற வழக்கறிஞராக நடித்திருப்பார். அவர் தெலுங்கு பேசுவார். அவர் மனைவி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். மகன் ஸ்ரீகாந்த் சோ-வை, அப்பா என்பார். நைனா என்று தெலுங்கில் அழைக்கச் சொல்வார் சோ. பிறகு இவர்களுக்குள் நடக்கும் மொழி சண்டை, சரியான நையாண்டி.
நீலு, பத்திரிகை ஆசிரியர். மனோரமா, நிருபர். இருவருக்கும் நடக்கும் பல உரையாடல்கள் ரசனையாக இருக்கும். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்த இந்தப் படத்துக்கு கண்ணதாசன் பாடல்களை எழுதினார். படத்தின் கிளைமாக்ஸில் பாதிரியார் உயிரிழந்துவிடுவார். ரிலீஸுக்கு பிறகு,“உண்மைக்காக போராடியவர் உயிர்துறக்கத்தான் வேண்டுமா? அவரை வாழ வைக்கக் கூடாதா?” என்று சோ-விடமே பலர் கேட்டனர். அதற்கு அவர், “உண்மைக்காக போராடியவர்கள் வாழ்ந்துகொண்டே இருந்தால், அவர்களுக்கு நம் நாட்டில் என்ன மரியாதை கொடுத்து விடுகிறோம்? செத்தால்தானே புகழாரம் சூட்டுகிறோம்?பாதிரியாரை நான் சாகடித்தது, மரியாதை, புகழ்பெறுவதற்காக என்று வைத்துக் கொள்ளுங்களேன்” என்றார்.
அந்த கிளைமாக்ஸ் காட்சியை பெங்களூருவில் எடுத்து முடிக்கும்போது, சென்னையில் இருந்து அந்தச் செய்தி படக்குழுவுக்கு கிடைத்தது. அது, ‘காமராஜர் இறந்தார்’ என்பது.
“படமாக்கப்படும் காட்சி - உண்மைக்காக போராடிய மனிதன் உயிர் துறக்கும் காட்சி. வந்த செய்தி- உண்மைக்காகப் போராடிய ஓர் அரசியல் தலைவர் உயிர் துறந்த செய்தி. அக்காட்சியை பொறுத்தவரை என் நெஞ்சை விட்டு நீங்காத விஷயம் இதுவாகத்தான் இருக்கும்” என்று குறிப்பிட்டிருக்கிறார், சோ.
1976-ம் ஆண்டு இதே தேதியில் வெளியானது இந்தப் படம்.