'ஐ' படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும் படத்தை இயகக்விருப்பதாக வெளியாகி இருக்கும் செய்திகளுக்கு இயக்குநர் ஷங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
விக்ரம், ஏமி ஜாக்சன், உபன் பட்டேன் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'ஐ' படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை ஆஸ்கர் நிறுவனம் பெரும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் 'ஐ' படத்தின் இறுதிகட்டமாக ஒரே ஒரு பாடல் மட்டும் காட்சிப்படுத்த வேண்டியது இருக்கிறது. இம்மாதம் தொடங்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
படத்தின் இறுதிகட்டப் பணிகள் படுதீவிரமாக நடைபெற்று வருகிறது. இறுதிகட்டத்தை 'ஐ' எட்டியுள்ளதால், ஷங்கரின் அடுத்த படம் குறித்த பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், அஜித் நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை இயக்குநர் ஷங்கர் மறுத்துள்ளார்.
'வேலையில்லா பட்டதாரி' படத்திற்கு பாராட்டு தெரிவித்து ஷங்கர் வெளியிட்ட ஃபேஸ்புக் கருத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்தை பதிவு செய்து வந்தார்கள். அதில் "தலயை வைத்து நீங்க படம் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இது உண்மையா.. இல்லையா" என்ற கேட்டதிற்கு, 'இல்லை' என்று ஷங்கர் தெரிவித்திருக்கிறார். இதனால் அஜித்தை வைத்து ஷங்கர் படம் இயக்கவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
'ஐ' படத்தஇத் தொடர்ந்து, ரஜினி - ஷங்கர் இணைப்பில் 'எந்திரன் 2' பணியில் ஈடுபட திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.