தமிழ் சினிமா

சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’

செய்திப்பிரிவு

நகைச்சுவை வேடங்களில் நடித்துவந்த சந்திரபாபுவை, திரும்பிப் பார்க்க வைத்த படம், பி.ஆர்.பந்துலுவின் ‘சபாஷ் மீனா’. இதில் 2 வேடங்களில் நடித்திருந்த சந்திரபாபு இதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகரானார். இதில் அவர் நடிப்பைக் கண்டுவியந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அவரை நகைச்சுவை நடிகராக இல்லாமல் ஹீரோவாக பார்க்கத் தொடங்கினர். அவரின் நடனம், பாடல்,நடிப்பு எல்லாவற்றிலும் மேற்கத்திய தாக்கம் அப்போதே இருந்தது. இதையடுத்து அவர் ஹீரோவாக நடித்த படங்களில் ஒன்று, ‘குமார ராஜா’. ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஜி.கே.ராமு இயக்கினார். எம்.ஜி.ஆர் நடித்த ‘புதுமைப்பித்தன்’ உட்பட சில படங்களைத் தயாரித்த சிவகாமி பிக்சர்ஸ் முனிரத்னம் இதைத் தயாரித்தார்.

சந்திரபாபுவுடன் டி.எஸ்.பாலையா, டி.எஸ்.துரைராஜ், ஜாவர் சீதாராமன், எம்.என்.ராஜம், சூர்ய கலா, ஞானம், சி.டி.ராஜகாந்தம், கள்ளபார்ட் நடராஜன் என பலர் நடித்தனர். மன்னரான டி.எஸ்.பாலையாவின் மகன்,குமார ராஜா, பிளே பாயாக இருக்கிறார். ஜாலியாக இளம் பெண்களுடன் ஆடுவதும் பாடுவதுமாக பொழுதைக் கழிக்கும் அவருக்கு நடனக்காரியான சூர்யகலா (தெலுங்கு நடிகை) மீது காதல். ஆனால், மகனுக்கு அடக்கமான பெண்ணைத் திருமணம் செய்துவைக்க நினைக்கிறார், டி.எஸ்.பாலையா.

அதன்படி ராஜத்தை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. டி.ஆர்.பாப்பா இசை அமைத்தார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி, தஞ்சை ராமையாதாஸ், கே.டி.சந்தானம் பாடல்கள் எழுதினர். சந்திரபாபு பாடிய ‘ஒண்ணுமே புரியலே உலகத்திலே’ பாடல் சூப்பர் ஹிட்டானது. ‘நான் வந்து சேர்ந்த இடம்’, ‘மணமகளாக வரும்’ ‘என்னைப் பார்த்த கண்ணு வேற பெண்ணைப் பார்க்குமா?’ உள்ளிட்ட பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.

இந்தப் படத்துக்காக சந்திரபாபு, லீலா பாடிய ‘ஆணுண்டு பாட, பெண்ணுண்டு ஆட கண்ணுண்டு காதலின் கதைகள் பேசவே’ என்ற வெஸ்டர்ன் ஸ்டைல் பாடல், படத்தில் இடம்பெறவில்லை என்றாலும் அப்போது வரவேற்பைப் பெற்றது. 1961-ம்ஆண்டு இதே நாளில் வெளியான இந்தப் படம் சந்திரபாபுவின் திறமையை மேலும் வெளிப்படுத்தியது.

SCROLL FOR NEXT