தமிழ் சினிமா

“என்னால் முடியாததை சாத்தியப்படுத்திய லோகேஷ் கனகராஜ்!” - இயக்குநர் ஹரி பகிர்வு

செய்திப்பிரிவு

சென்னை: “சினிமாட்டிக் யூனிவர்ஸை ‘சிங்கம் 3’ படத்தின் போதே யோசித்தேன். அப்போது முடியவில்லை. இப்போது லோகேஷ் கனகராஜ் அதனை திறம்பட செய்து கொண்டிருக்கிறார்” என இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற விஷயம் பரவிக் கொண்டிருக்கிறது. அப்படி ஆறுச்சாமியும் (விக்ரம்), துரை சிங்கமும் (சூர்யா) சேருவதற்கு வாய்ப்புள்ளதா?” என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஹரி, “சிங்கம் 3 படத்தை இயக்கும்போது இந்த கான்செப்டை யோசித்தேன். விமானத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, ஆறுச்சாமி (விக்ரம்) மனைவியுடன் வருவார், துரை சிங்கம் (சூர்யா) எதிரில் இருப்பார். இருவரும் பேசிக்கொள்வார்கள். பெருமாள் பிச்சை என்ன ஆனார் என்று அனுஷ்கா, விக்ரமிடம் கேட்பார்.

‘இன்னுமா நீங்க அவர கண்டுபிடிக்கல’ என்று அனுஷ்கா கேட்க, விக்ரமும், சூர்யாவும் மாறி மாறி சிரித்துகொள்வார்கள். ஏனென்றால் உண்மை என்ன என்பது இருவருக்கும் தெரிந்திருக்கும். இப்படி ஒரு காட்சியை யோசித்தேன். ஆனால், இதற்கு தயாரிப்பாளர்கள் தொடங்கி நடிகர்கள் வரை எல்லோரிடமும் பேசி ஒப்புதல் வாங்க வேண்டியிருந்தது.

பெரிய விஷயமாக இருந்ததால் என்னால் அப்போது அதனை செய்ய முடியவில்லை. ஆனால், இப்போது லோகேஷ் கனகராஜ் அதனை திறம்பட செய்துகொண்டிருக்கிறார்” என்றார் ஹரி.

SCROLL FOR NEXT