சென்னை: ஃபோகஸ் ஸ்டூடியோஸ் சார்பில் விநாயக் துரை தயாரித்து, இயக்கியுள்ள படம், ‘வல்லவன் வகுத்ததடா’. இதில் தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலசந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, ரெஜின் ரோஸ், விக்ரமாதித்யா உட்பட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்துள்ளார். சகிஷ்னா சேவியர் இசை அமைத்துள்ளார்.
வரும் 11-ம் தேதி வெளியாகும் இந்தப் படம் பற்றி விநாயக் துரை கூறியதாவது: இறைவன் திட்டப்படி தகுதியுள்ளவைத் தப்பிப்பிழைக்கும், நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்பதுதான் இந்தப் படம் சொல்லும் விஷயம். 5 விதமான மனிதர்கள். அனைவருக்கும் ஒவ்வொரு விஷயத்துக்காக பணத்தேவை இருக்கிறது. அந்தப் பணம் 5 பேர் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதுதான் கதை. ஹைபர் லிங்க் கதையை கொண்ட படம். ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லி எல்லாம் ஓகே ஆன நிலையில் அவர் தயாரிக்க முடியாமல் போனது. அதனால் என் தந்தையிடம், பிசினஸ் செய்யப்போகிறேன் என பொய் சொல்லி காசு வாங்கி, இதைத் தயாரித்துள்ளேன். சமீபத்தில்தான் விஷயத்தை அவரிடம் சொன்னேன். அவர் ஆச்சரியப்பட்டார். இந்தப் படம் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும்” என்றார்.