தமிழ் சினிமா

வானம்பாடி: நடிகை ஜோதிலட்சுமியின் முதல் படம்

செய்திப்பிரிவு

கவிஞர் கண்ணதாசன், ஒரு பக்கம் பாடல்களை எழுதி குவித்துக் கொண்டிருந்தாலும் அவருக்கு படம் தயாரிக்கும் ஆசையும் அதிகமாக இருந்தது. தனது கண்ணதாசன் புரொடக்‌ஷன்ஸ் மூலம் ‘மாலையிட்ட மங்கை’, ’சிவகங்கை சீமை’, ‘கவலை இல்லாத மனிதன்’ உட்பட ஆறு படங்களைத் தயாரித்திருக்கிறார். அதில் ஒன்று ‘வானம்பாடி’.

‘சேஷ் போரிச்சோய்’ என்ற வங்கமொழி படத்தின் ரீமேக் இது. கண்ணதாசனின் நீண்ட கால நண்பரான ஒளிப்பதிவாளர் ஜி.ஆர்.நாதன் இயக்கிய இந்தப் படத்தின் வசனத்தை வலம்புரி சோமநாதன் எழுதினார். கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார்.

படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள். எஸ். எஸ். ராஜேந்திரன், தேவிகா, முத்துராமன், டி.ஆர்.ராமச்சந்திரன், ஆர்.எஸ்.மனோகர், ஷீலா, புஷ்பலதா, எஸ். வி. சகஸ்ரநாமம், வி.எஸ்.ராகவன், டி.ஆர் ராஜகுமாரி, ஜாவர் சீதாராமன், ஓ.ஏ.கே.தேவர் ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களுடன் கமல்ஹாசன் சிறுவனாக நடித்திருந்தார்.

ஜமீனிடம் இருந்து தப்பிக்கும் இளம்பெண் மீனா, ரயிலில் விழுந்து தற்கொலை செய்ய நினைக்கிறார். ஆனால் வயதான தணிகாசலம் என்பவரால் காப்பாற்றப் பட்டு அவர் வீட்டில் வசிக்கிறார். ஒரு கட்டத்தில் தணிகாசலத்தின் மருமகன் கவிஞர் சேகருக்கும் மீனாவுக்கும் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு நடக்கிறது. திடீரென்று அங்கு வரும் கோபால் என்பவர், மீனா தனது மனைவி என்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்று கதை போகும்.

இதில், தேவிகா இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். ஒரு காலத்தில், வைஜயந்திமாலா,சாவித்திரி, அஞ்சலிதேவி , ஜமுனா ஆகியோருடன் ஹீரோவாக நடித்தடி.ஆர்.ராமசந்திரன் இதில் புஷ்பலதா ஜோடியாக நடித்து காமெடி ஏரியாவையும் பார்த்துக்கொண்டார்.

கண்ணதாசன் சொந்தப் படம் என்பதால் பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக அமைந்தன. சுசீலா குரலில் வெளியான ‘கங்கைக் கரை தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்’ பாடலில் ரசிகர்கள் மெய்மறந்தார்கள். ‘தூக்கணாங்குருவி கூடு’, ‘ஆண் கவியை வெல்ல வந்த பெண்கவியே வருக’, ‘ஏட்டில் எழுதி வைத்தேன்’, ‘ஊமைப் பெண் ஒரு கனவு கண்டாள்’, ‘கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்’, ‘யாரடி வந்தார் என்னடி சொன்னார்’ என பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்.

‘யாரடி வந்தார் என்னடி சொன்னார்’ பாடலில் நடனத்தில் மிரட்டி இருப்பார் ஜோதிலட்சுமி. இப்போது பார்த்தாலும் சிலிர்க்கும் உணர்வை தருகிறது, இந்த பாடல். 1963-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படம்தான் ஜோதிலட்சுமிக்கு முதல் படம்!

SCROLL FOR NEXT