சென்னை: நாட்டார் கதை பின்னணியில் உருவாகியுள்ள சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் நகுல் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு 'தி டார்க் ஹெவன்' என்று தலைப்பு வைத்துள்ளனர். டீம் பி புரொடக்ஷன் ஹவுஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை பாலாஜி இயக்குகிறார். மணிகண்டன் பி.கே.ஒளிப்பதிவு செய்கிறார். சக்தி பாலாஜி இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படம் பற்றி, இயக்குநர் பாலாஜி கூறியதாவது:
தென்காசி அருகிலுள்ள மேக்கரை கிராமத்தில் 25 வருடங்களுக்கு ஒரு முறை ஜூன் மாதம் அசம்பாவித சம்பவம் நடைபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்தப் பகுதிக்கு இன்ஸ்பெக்டராக வருகிறார் நகுல். அப்போது அந்தப் பகுதியில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன. அதற்குப் பின்னணியில் இருப்பது மக்களின் நம்பிக்கையா, அல்லது சதியா என்பதுதான் கதை. நாயகியாக ரேணு சவுந்தர் நடிக்கிறார்.
எதிர்பாராத ஒரு பாத்திரத்தில் இலங்கை நடிகர் ஒருவர் நடிக்கிறார். சரண், கேசவன், ஜான் அலெக்ஸ், மனோஜ், ஆண்டனி பிரகன் உட்பட பலர் நடிக்கின்றனர். கொடைக்கானல், மேக்கரை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இவ்வாறு பாலாஜி கூறினார்.