சில படங்களையும் பாடல்களையும் மறக்கவே முடியாது. பச்சைக் குத்தியது போல அவை மனதோடு குத்தியிருக்கும். அல்லது கொத்தியிருக்கும். அந்தப் பாடல்கள்/ படங்களோடு நமக்கிருக்கும் பின் கதையும் அதற்குக் காரணமாக இருக்கலாம். அப்படி மறக்க முடியாத பாடல்களையும் கதையையும் கொண்ட படங்களில் ஒன்று, ‘பயணங்கள் முடிவதில்லை’.
பாலுமகேந்திராவின் ‘கோகிலா’ மூலம் கன்னடத்தில் அறிமுகமான மோகன், தமிழுக்கு வந்தது, அதே இயக்குநரின் ‘மூடுபனி’ மூலம். அதில், பாஸ்கர் என்ற கேரக்டரில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அடுத்து ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ கவனிக்கப்பட்டாலும் அதில் அவர் ஹீரோ இல்லை. ‘கிளிஞ்சல்கள்’ மூலம்நாயகனான மோகனின், அடுத்த படம், ‘பயணங்கள் முடிவதில்லை’. ‘கிளிஞ்சல்களி’ல் நாயகியாக நடித்த பூர்ணிமா தான் இதிலும் நாயகி. அவர் தோழியாக ரஜினி, தந்தையாக பூர்ணம் விஸ்வநாதன், மோகனின் நண்பராக எஸ்.வி.சேகர், வீட்டு ஓனராக கவுண்டமணி, மருத்துவராக ராஜேஷ் என பலர் நடித்தனர்.
ஒரு சிங்கிள் டீ-க்கு வழியில்லாமல் இருக்கிறார்கள், நண்பர்கள் மோகனும் எஸ்.வி.சேகரும். மோகன் சிறந்த பாடகர். வாய்ப்பு கிடைக்கவில்லை. தோழியின் வீட்டுக்கு வரும் பூர்ணிமா எழுதிய கவிதை, காற்றில் பறந்து மோகன் அறைக்குள் விழுகிறது. அவர் கிடாரில் இசைத்து அதைப் பாடலாகப் பாட, ஆச்சரியப்படும் பூர்ணிமா அவருக்குப் பாடும் வாய்ப்புவாங்கி தருகிறார்.
பிரபல பாடகனாகிறார் மோகன். இருவருக்கும் காதல் முளைக்கிறது. ஒரு நாள் பாட்டுக்காக வெளியூருக்குச் சென்று வரும் மோகனின் நடவடிக்கையில் திடீர் மாற்றம். பூர்ணிமாவை வெறுக்கிறார். ஏன், எதற்கு என்பது மீதி கதை.
ஒரு எளிய காதல் கதைக்கு, சுவாரஸ்யமான திரைக்கதையால் உயிரூட்டியிருந்தார் ஆர்.சுந்தர்ராஜன்.
படத்துக்குப் பெரிய பலம், இளையராஜாவின் பாடல்கள். ‘இளைய நிலா பொழிகிறது’, ‘முதன்முதல் ராக தீபம் ஏற்றும் நேரம்’, ‘தோகை இளமயில் ஆடும்...’, ‘வைகரையில், வைகை கரையில்’, ‘சாலையோரம்’, ‘மணி ஓசை கேட்டு எழுந்து’, ‘ஏஆத்தா’ ஆகிய பாடல்களில் ரசிகர்களை உருக வைத்திருந்தார், இசை ராஜா. அந்த காலகட்டத்தில் சந்துபொந்து டீ கடைகளில் இருந்து , காதுகுத்து சடங்குகள் வரை சங்கீத ஜாலம் நடத்தின இந்தப் படத்தின் பாடல்கள். இந்தப் படம் வெளியான போது, ஹீரோக்களுக்கு வைப்பது போல இளையராஜாவுக்குப் பிரம்மாண்ட கட் அவுட் வைத்திருந்தார்கள்.
முதலில் இதில் ஹீரோவாக நடிக்க வேண்டியது, சுரேஷ். அவர் ஒரு விபத்தில் சிக்கியதால், அந்த வாய்ப்பு மோகனுக்கு வந்தது.
‘பயணங்கள் முடிவதில்லை’க்கு பல ‘முதல்’ ஸ்பெஷல் உண்டு. ஆர்.சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமான படம் இதுதான். இதையடுத்து அவர் பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தார். மோகனுக்கு இந்தப் படத்தில் பின்னணி குரல் கொடுக்க எஸ்.பி.பியிடம்தான் முதலில் கேட்டார்கள். அவர் பிசியாக இருந்ததால், மறுத்துவிட்டார். பிறகுதான் பாடகர் சுரேந்தர் பேசினார். இதிலிருந்து தொடர்ந்து மோகன் படங்களுக்குப் பேசினார், சுரேந்தர். கோவைத்தம்பியின் ‘மதர்லேண்ட் பிக்சர்ஸ்’ தயாரித்த முதல்படம் இது. இந்தப் படத்தில், கவுண்டமணி அடிக்கடி பேசும், ‘இந்த சென்னை மாநகரத்திலே...’ என்ற வசனம் அப்போது பிரபலம்.
ரஜினி, கமல் உச்சத்தில் இருந்தபோதே, வெள்ளிவிழா நாயகன் எனப் புகழப்பட்ட மோகன், மைக் மோகன் ஆனது இந்தப்படத்தில் இருந்துதான். இதில் இருந்துஅவர் நடித்த சில படங்களில் மைக்கை கொடுத்திருந்தார்கள். அவை அனைத்தும் ஹிட்டாயின என்பது அவருக்கான ஸ்பெஷல்!.
தமிழகத்தில் பல பகுதிகளில் நூறு நாட்களுக்கு மேல் ஓடிய இந்தப் படம் சில நகரங்களில் 200 நாட்களுக்கு மேல் ஓடியது. 1982-ம் ஆண்டு இதே நாளில் வெளியான இந்தப் படத்துக்கு வயது 42