ரஜினி நடிப்பில் ஹைதரபாத்தில் நடைபெற்று வந்த 'லிங்கா' படப்பிடிப்பு முடிவுற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருக்கிறது.
ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி சின்கா, சந்தானம், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'லிங்கா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கி வருகிறார்.
மைசூரில் படப்பூஜையுடன் தொடங்கிய 'லிங்கா' படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. முதலில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு அதற்குப்பிறகு அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடைபெற்றது.
மிகப்பெரிய அணை செட் போடப்பட்டு அதன் பின்னணியில் எடுக்கப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்படத்தில் ரஜினி கலெக்டராக நடித்துவருவதாக செய்திகள் வெளியாகின.
ரஜினியோடு பல்வேறு துணை நடிகர்கள் நடனமாட 'லிங்கா' படத்தில் முதல் பாடலும் படமாக்கப்பட்டது. ஹைதராபாத்தில் தீவிரமாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது. விரைவில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறார்கள்.
டிசம்பர் 12ம் தேதி 'லிங்கா' படத்தை வெளியிட இருக்கிறார்கள். விரைவில் படப்பிடிப்பு முடித்து, கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருப்பதால் அதற்கான பணிகள் மற்றும் இறுதிகட்ட பணிகள் தொடங்க இருக்கிறார்கள்.