தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கான மோதல் ஆரம்ப காலத்திலேயே தொடங்கிவிட்டது. அவர்கள் மோதினார்களோ, இல்லையோ, அவர்களின் ரசிகர்கள் மோதிக் கொண்டார்கள். 1930-களில் தொடங்கி 1950 வரை, பி.யு.சின்னப்பாவும் தியாகராஜ பாகவதரும் டாப்ஹீரோக்களாக இருந்தார்கள். இருவருக்கும் தனித்தன்மையான சில திறமைகள் இருந்தன.
இவர்கள் ரசிகர்களின் மோதல் அதிகமாக இருந்த காலகட்டத்தில் பி.யு.சின்னப்பா ஹீரோவாக நடித்த படம், ‘அர்த்தநாரி’. அப்போது அதிகம்பேசப்பட்ட நாட்டுப்புறக் கதை ஒன்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட படம் இது. காந்தார சாம்ராஜ்யத்தின் இளவரசிகள் எம்.எஸ்.சரோஜா,மற்றும் எம்.வி.ராஜம்மா. துரதிர்ஷ்டத்தால் ராஜ்ஜியம் உட்பட அனைத்தையும் இழந்து கங்கை நதிக்கரையில் இருக்கும் ஆசிரமத்தில் வாழ்கின்றனர். சிறையில் இருக்கும் இளவரசன் விஜயவர்மனான சின்னப்பா, அங்கிருந்து தப்பித்து தனது ராஜ்ஜியத்தை மீட்கத் திட்டம் தீட்டுகிறார்.
இதற்கிடையில், சரோஜாவும் ராஜம்மாவும் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்கிறார்கள். அவர்களைக் காப்பாற்றுகிறார் முனிவர் ஒருவர். இதற்கிடையே சிலரின் உதவியால் சிறையில் இருந்து தப்பிக்கும் சின்னப்பா, அவர்களைத் தேடி வருகிறார். பிறகு என்ன நடக்கிறது என்கிற யூகிக்கக் கூடிய கதைதான்.ஆனால் பி.யு.சின்னப்பாவின் நடிப்பால் இந்தப் படம் ஓரளவு வெற்றி பெற்றது. டி.ஆர்.ராமச்சந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், காளி.என்.ரத்தினம் உட்பட பலர் நடித்தனர்.
எழுத்தாளர் பி.எஸ்.ராமையா இதன் ஸ்கிரிப்டை எழுதினார். மெட்ராஸ் யுனைட்டெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்பரேஷன் நிறுவனத்தின் இசைக் குழுவினர் இசையமைத்தனர். பாடல்களை பாபநாசம் சிவன், ராஜகோபால ஐயர் எழுதினர். சில பாடல்களைச் சின்னப்பா பாடினார். டி.ஆர்.ரகுநாத்இயக்கிய இதன் படப்பிடிப்பு, அடையாறில் அமைந்திருந்த பிரகதி ஸ்டூடியோவில் நடந்தது.1946-ம் ஆண்டு இதே தேதியில்தான் இந்தப் படம் வெளியானது.