தமிழ் சினிமா

குத்துப்பாட்டும் சினிமாவின் ஒரு அங்கம்தானே? - கேள்வி கேட்கும் நர்கீஸ் பக்ரி

ஆர்.சி.ஜெயந்தன்

‘மம்பட்டியான்’ படத்துக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்ட பிரசாந்த் மீண்டும் நடிக்க வந்திருக்கும் படம் ‘சாகஸம்’. இப்படத்தில் பிரசாந்துடன் ஒரு பாடலில் ஆடுவதற்காக வந்திருக்கிறார் பாலிவுட்டின் கவர்ச்சி நாயகிகளில் ஒருவரான நர்கீஸ் பக்ரி. பின்னி மில்லில் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் பிரசாந்துடன் ஆடிக்கொண்டிருந்த நர்கீஸ் பக்ரியை படப்பிடிப்பின் இடைவேளையில் சந்தித்தோம்.

“நான் சென்னைக்கு வந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது. கடந்த மாதமே முடிந்திருக்க வேண்டிய படப்பிடிப்பு இது . இந்தப் பாடலுக்கான நடனப் பயிற்சியை மும்பையிலேயே 10 நாட்கள் எடுத்ததால் ஆடுவதற்கு கஷ்டமில்லாமல் இருக்கிறது. தமிழ் சினிமா உலகின் இந்த திட்டமிடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

ராஜூ சுந்தரத்தின் நடன அசைவுகளை மிகவும் ரசித்துச் செய்கிறேன். இந்தப் பாடலுக்கான அர்த்தத்தை பிரசாந்த் எனக்குச் சொல்லிக்கொடுத்தார். நான் எதிர்பார்த்ததுக்கும் அதிகமாக பாடலில் என்னைப் பெருமை படுத்திவிட்டார்கள். நெகிழ்ந்துபோய் இருக்கிறேன்” என்று படபடவென்று பேசத் தொடங்கினார்.

தமிழ்நாட்டு உணவுகள் உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

கடந்த மூன்று நாட்களாக தென்னிந்திய உணவுகளை ஒரு கை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் அவற்றின் ரசிகையாகி விட்டேன். குறிப்பாக ‘மூளை பிரை’ என்ற ஒரு உணவு இருப்பதையே இங்கேதான் தெரிந்து கொண்டேன்.

சென்னை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

எனக்கு மும்பை, சென்னை இரண்டுமே ரொம்பப் பிடிக்கும். ஆனால் என் நேசத்துக்குரிய நகரம் என்றால் அது என் சொந்த ஊரான நியூ யார்க்தான். உலகம் முழுவதுமிருந்து பல்வேறு இன மக்கள், பல்வேறு கலாச்சாரங்களை சேர்ந்தவர்கள் அங்கே வேலைக்காகவும். சுற்றுலாவுக்காகவும் வந்து குவிகிறார்கள். உலக நாகரிகத்தின் முகத்தை அங்கே நீங்கள் பார்க்கலாம். நியூயார்க்கின் இரவு வாழ்க்கையை உலகில் வேறு எங்கும் காண முடியாது.

பாலிவுட்டில் வேகமாக வளர்ந்துவரும் நேரத்தில் நீங்கள் குத்துப்பாடல்களில் ஆர்வம் காட்டுவது ஆச்சரியமாக இருக்கிறதே?

குத்துப்பாட்டும் சினிமாவின் ஒரு அங்கம்தானே? அதேநேரத்தில் இதுவே நான் ஆடும் கடைசி குத்துப்பாட்டாக இருக்கும். பிரசாந்துக்காகவும், படத் தயாரிப்பாளரின் இனிமையான அணுகுமுறைக்காகவும் நான் இந்தப் பாடலில் ஆடுகிறேன். அதோடு இந்தப் பாடலும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

நீங்கள் ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறீர்களாமே?

ஆமாம். பால் பெய்க் இயக்கும் டிடெக்டிவ் காமெடி த்ரில்லரில் நடிக்கிறேன். படத்தில் நானும் ஒரு சீக்ரெட் ஏஜெண்ட்தான். மேலிசா மெக்கார்த்திதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அடுத்த ஆண்டு இந்தப்படம் ரிலீஸாகும்.

SCROLL FOR NEXT