பிரிட்டிஷ் எழுத்தாளரான ரஃபேல் சபாடினி, காதல் மற்றும் சாகசக் கதைகள் எழுதுவதில் வல்லவர். அவருடைய சில நாவல்கள் திரைப்படங்களாகி இருக்கின்றன. அதில் ஒன்று ‘ஸ்கேராமூச்சே’ (Scara mouche). இந்த நாவலின் அடிப்பைடயில், இதே பெயரில் உருவான ஹாலிவுட் திரைப்படம் முதலில் 1921-ம் ஆண்டு வெளியானது. பிறகு 1954-ம் ஆண்டு அதையே வேறு நடிகர்கள் நடிக்க ரீமேக் சய்தனர். இரண்டு முறையும் வெற்றி பெற்ற இந்தப் படத்தின் பாதிப்பில், தமிழில் உருவான படம், ‘அரசிளங்குமரி’!
இந்தப் படத்தை, எம்.ஜி.ஆரை ஹீரோவாக அறிமுகப்படுத்திய ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கினார். எம்.ஜி.ஆருடன் பத்மினி, ராஜசுலோச்சனா, ஆர்.நாகேந்திர ராவ்,முத்துராமன், நம்பியார், அசோகன், டி.ஏ.மதுரம் உட்பட பலர் நடித்தனர். சாண்டோ சின்னப்பா தேவர்,கவுரவ வேடத்தில் நடித்தார்.
விவசாயியான அறிவழகனின் (எம்.ஜி.ஆர்) சகோதரி அன்புக்கரசியை (பத்மினி), நாட்டின் தளபதி வெற்றிவேலன் (எம்.என். நம்பியார்), தான் சாதாரண போர்வீரன் என்று பொய் சொல்லி காதலிக்கிறார். காதலை ஏற்றுக்கொள்ளும் எம்.ஜி.ஆர், அவருக்கு அன்புக்கரசியைத் திருமணம் செய்து வைக்கிறார். குழந்தை பிறக்கிறது. ஒரு கட்டத்தில் இருவரையும் விட்டுவிட்டு செல்லும் வெற்றிவேலன் அரசர் மகள் இளவரசியை திருமணம் செய்ய துடிக்கிறார் . அதற்காக சதி செயலில் இறங்க, எம்.ஜி.ஆர்அந்த திட்டங்களை தடுத்து தங்கையை வெற்றிவேலனுடன் எப்படி சேர்க்கிறார் என்பது படம்.
எம்.ஜி.ஆர், மு.கருணாநிதி ஆகியோரை அறிமுகப்படுத்திய ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த படம் இது. இதற்கும் மு.கருணாநிதி கதை, வசனம் எழுதினார். இசை அமைத்தது, ஜி.ராமநாதன். பாடல்களைப் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன், கு.மா.பாலசுப்ரமணியம், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், இ.ரா.பழனிச்சாமி, முத்துக்கூத்தன் எழுதினர்.
இதில் இடம்பெற்ற பட்டுக்கோட்டையின் ‘சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா’ ஹிட் பாடல். பாடல் வெளியாகி 62 வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்றும் அந்தப் பாடல் உயிர்ப்போடு இருப்பதற்கு அர்த்தமுள்ள அதன்வரிகள் காரணம்.‘ஏற்றமுன்னா ஏற்றம் இதிலேஇருக்குது முன்னேற்றம்’ பாடல்உட்பட அனைத்துப் பாடல்களும் வரவேற்பைப் பெற்றன.
இந்தப் படத்தில் முள்ளுக் கை சண்டைக் காட்சியில் நடித்திருப்பார், சாண்டோ சின்னப்பா தேவர். அந்தச் சண்டைக்காட்சி அப்போது பேசப்பட்டது. அதே போல மாடிப்படியில்ஏறிக்கொண்டே எம்.ஜி.ஆரும்நம்பியாரும் போடும் சண்டைக்காட்சியைப் படமாக்க அதிக நாட்கள் எடுத்துக்கொண்டார்கள். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ராஜசுலோச்சனாவும் நம்பியாருக்கு ஜோடியாக பத்மினியும் நடித்திருந்தனர்.
இந்தப் படம் தொடங்கியதில் இருந்து பல்வேறு பிரச்சினைகள். இதனால் 4 வருடங்களாக படம் வெளியாகவில்லை. பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ஏ.எஸ்.ஏ.சாமி படத்தில் இருந்து விலகிவிட்டார். பிறகு ஏ.காசிலிங்கம் இயக்கி முடித்தார்.
படத்தின் ைட்டிலில், இயக்கம்ஏ.எஸ்.ஏ.சாமி என்று போட்டுவிட்டு, ‘எஞ்சிய பல காட்சிகளை நிறைவு செய்து தந்தது டைரக்டர் ஏ.காசிலிங்கம்’ என்று போடுவார்கள். காசிலிங்கம், எடிட்டராக இருந்து இயக்குநர் ஆனவர். 1961-ம் ஆண்டு தயாரிப்பாளர் ஜுபிடர் சோமு மறைந்த பின்புதான் படம் வெளியானது.
எம். ஜி.ஆரின் அரசிளங்குமரி, சிவாஜியின் தங்கப்பதுமை உட்பட 4 படங்களை ஒரே நேரத்தில்தயாரித்தது ஜூபிடர் பிக்சர்ஸ்.இந்தப் படங்கள் பெரிய வெற்றிபெறாததால், ஜூபிடருக்கு சொந்தமான நெப்டியூன் ஸ்டூடியோ விற்பனைக்கு வந்ததுவிட்டது. அதை எம்.ஜி.ஆர் வாங்கி, சத்யா ஸ்டூடியோவாக்கினார்.
1961-ம் ஆண்டு இதே தேதியில் வெளியானது இந்தப் படம்.