தன்னை அடித்து அவமானப்படுத்திய நபரை திருப்பி அடிக்காமல் செருப்பு அணிய மாட்டேன் என்று முடிவெடுக்கும் ஒரு புகைப்படக் கலைஞனின் கதையே 'நிமிர்'.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் நேஷனல் ஸ்டுடியோ வைத்திருக்கிறார் செல்வம் (உதயநிதி). தனக்குத் தெரிந்த அளவிலான புகைப்படக் கலையில் ஊரில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளையும் போட்டோ எடுக்கிறார். ஒரு நாள் திடீரென்று அறிமுகம் இல்லாத வெள்ளையப்பன் (சமுத்திரக்கனி), செல்வத்தை (உதயநிதி) அடித்து அவமானப்படுத்துகிறார். இதை ஊரே வேடிக்கை பார்க்கிறது. இதனால் வெள்ளையப்பனை திருப்பி அடிக்காமல் செருப்பு அணிவதில்லை என்று சொல்கிறார் செல்வம். இதனிடையே செல்வத்தின் காதலி வள்ளி (பார்வதி நாயர்) தன் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார். இந்த வருத்தத்தோடு இருக்கும் செல்வத்திற்கு மலர் (நமிதா பிரமோத்) அறிமுகம் ஆகிறார். நாளடைவில் இருவருக்கும் காதல் மலர, தன் அண்ணன்தான் வெள்ளையப்பன் என்கிறார் மலர். இதையடுத்து செல்வம் என்ன செய்கிறார், சபதப்படி செருப்பை அணிந்தாரா, மலரைக் கரம் பிடித்தாரா என்பது மீதிக் கதை.
மலையாளத்தில் திலீஷ் போத்தன் இயக்கத்தில் ஃபகத் பாசில், அபர்ணா நடிப்பில் வெளிவந்த 'மகேஷிண்ட பிரதிகாரம்' படத்தை தமிழில் நிமிர் என்ற பெயரில் மறு ஆக்கம் செய்திருக்கிறார் பிரியதர்ஷன். ஆனால், அந்த மறு ஆக்கம் முழுமையடைய வாழ்வனுபவத்தையும், இயல்பான உண்ர்வையும் கடத்தவில்லை.
அதிகம் அலட்டிக்கொள்ளாமல் பக்குவமான நடிப்பைத் தர வேண்டிய கதாபாத்திரம் உதயநிதிக்கு. அவரும் ஒருவழியாக சமாளித்து நடித்திருக்கிறார். 'மனிதன்' படத்துக்குப் பிறகு உதயநிதி தன் கதாபாத்திரத்துக்கு ஓரளவு நியாயம் செய்திருக்கிறார். காதல் பிரிவின் மீதான வருத்தத்தை மட்டும் இன்னும் கொஞ்சம் நன்றாக வெளிப்படுத்தி இருக்கலாம்.
பார்வதி நாயர் கதாபாத்திரத்துக்கேற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார். தேர்ந்த புகைப்படக் கலைஞருக்கான பாத்திரத்தில் இயக்குநர் மகேந்திரன் மிகச் சரியாகப் பொருந்துகிறார். எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் ஆகியோர் நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளனர்.
குறும்புப் பெண்ணாக நமிதா பிரமோத் தன் இருப்பைப் பதிவு செய்கிறார். அருள்தாஸ், இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு ஆகியோர் படத்தில் இருக்கிறார்கள். மிக முக்கியமாக கட்டமைக்கப்பட வேண்டிய சமுத்திரக்கனி கதாபாத்திரம் படத்தின் இயல்போடு பொருந்தாமல் அந்நியப்பட்டு நிற்கிறது. கதாபாத்திரத் தேர்வில் ஏற்பட்ட சரிவே இந்தத் துருத்தலுக்குக் காரணம்.
கேரளப் பகுதி சாயலை ஒத்த குற்றாலம், தென்காசியின் அழகை ஏகாம்பரம் கேமராவில் அள்ளி வந்திருக்கிறார். தர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத்தின் இசை கவனம் பெறுகிறது.
ரசிகர்களுக்குத் தெரிந்த பிரபல நடிகர்களே, பிரதான கதாபாத்திரங்களை ஏற்றிருப்பது படத்தின் மிகப் பெரிய பலவீனமாகி இருக்கிறது. அதில் சமுத்திரக்கனி கதாபாத்திரம் குறிப்பிடத்தகுந்த ஒன்று. யாருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே பார்வதி நாயர் அப்படி ஒரு முடிவெடுக்கிறார். ஆனால், படத்தில் பார்வதி நாயர் கதாபாத்திரம் எதிர்மறையான தோற்றத்தையே கொடுக்கிறது. உதயநிதி எடுப்பது முடிவா, சத்தியமா, சபதமா என்பதைக் கூட தெளிவாகக் காட்சிப்படுத்தவில்லை. படத்தின் மையப்புள்ளியான அந்தத் தருணம் வீணாகி இருக்கிறது. பார்வதி நாயர் கணவர் கதாபாத்திரத்தை நீட்டிப்பு செய்திருப்பதை தவிர்த்திருக்கலாம். அதுவும் அவர் உதயநிதியுடன் பேசும் வசனம் நகைச்சுவைக்குப் பதிலாக அபத்தச் சுவை ஆகியிருக்கிறது. செயற்கையான சில காட்சிகள் சோர்வை வரவழைக்கின்றன.
மொத்தத்தில் 'மகேஷிண்ட பிரதிகாரம்' பார்க்காதவர்கள் உதயநிதிக்காக ஒரு முறை 'நிமிர்'ந்து பார்க்கலாம்.