தனுஷ் நடிக்கும் 'குரங்காட்டி' என்னும் படத்தை இயக்கவில்லை என்று 'குக்கூ' இயக்குநர் ராஜூமுருகன் தெரிவித்தார்
தினேஷ், மாளவிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் 'குக்கூ' படத்தை இயக்கினார் ராஜூமுருகன். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்தை நெக்ஸ்ட் பிக் பிலிம்ஸ் தயாரித்தது. ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிட்டது.
கண் தெரியாத இருவரின் காதல் கதையை, ரம்மியமான இசையுடன் காட்சிப்படுத்தி இருந்தார் ராஜூமுருகன். இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதிக லாபம் கிடைத்ததால், அடுத்த படம் இயக்கும் வாய்ப்பு கொடுத்து, ராஜுமுருகனுக்கு ஒரு காரும் பரிசாக அளித்தார் தயாரிப்பாளர்.
ராஜூமுருகன் அடுத்த படம் குறித்து இணையத்தில் பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது குறித்து ராஜூமுருகனிடம் கேட்ட போது, "மனதில் தோன்றியது எல்லாம் எழுதுகிறார்கள். முதலில் நான் எனது அடுத்த படத்திற்கான கதை வேலையை முடிக்கவே இல்லை. எப்போதுமே கதை எழுதி முடித்தவுடன் தான், அதற்கு ஏற்ற நாயகனைத் தேடுவேன்.
தனுஷ் நாயகனாக நடிக்கும் 'குரங்காட்டி' என்னும் படத்தை நான் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதில் உண்மையில்லை." என்று கூறினார்.