டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில், விஞ்ஞானி ஆர்.ஏ. மஷேல்கருக்கு பத்ம விபூஷண் விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். நடிகர் கமல்ஹாசன், கடம் வித்வான் விக்கு விநாயக் ராம், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.
விஞ்ஞானி ஆர்.ஏ. மஷேல்கர்(71) பொறியியல் மற்றும் பாலிமர் அறிவியல் துறையில் நிபுணத்துவம் பெற்றவர். உயர்கல்வி, தேசிய வாகன எரிபொருள் கொள்கை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த தேசிய அளவிலான 12 உயர்நிலைக் குழுக்களுக்கு தலைமை வகித்துள்ளார். அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.
பத்ம விபூஷண் விருது மத்திய அரசால் இந்தியக் குடிமகன் ஒருவருக்கு வழங்கப்படும் இரண்டாவது உயரிய விருதாகும்.
12 பேருக்கு பத்ம பூஷண்
நடிகர் கமல்ஹாசன், கடம் வித்வான் விக்கு விநாயக் ராம், பாட்மின்டன் வீரர் மற்றும் பயிற்சியாளர் கோபிசந்த், பாடலாசிரியர் வைரமுத்து, சிகாகோ பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை பேராசிரியர்கள் சுசானே எச். ருடால்ப் மற்றும் லாய்டு ஐ.ருடால்ப், முன்னாள் இந்திய தலைமைத் தணிக்கை அதிகாரி வி.என்.கவுல், சிசு நல மருத்துவர் நீலம் க்ளெர், தாகா பல்கலைக்கழக பேராசிரியர் எமிரிடஸ், பேராசிரியர் அனிசுஸ்ஸமன், விஞ்ஞானி ஜியேஸ்தராஜ் பி. ஜோஷி, வாய்ப்பாட்டுக் கலைஞர் பேகம் பர்வீன் சுல்தானா, ரெடிமேட் கான்கிரீட் கட்டமைப்பின் (பிரீகாஸ்ட் கான்கிரீட்) தொழில்நுட்பத்தின் முன்னோடியான அனுமொலு ராமகிருஷ்ணா (மறைவுக்குப் பின்) ஆகியோருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.
53 பேருக்கு பத்மஸ்ரீ
நடிகை வித்யாபாலன், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல், இந்திய மகளிர் கபடி அணி பயிற்சியாளர் சுனில் தபாஸ், மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் உள்ளிட்ட 53 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
பார்வையிழந்தோருக்காக சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் ஜவஹர்லால் கவுல்(69) பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். கவுல், சின்னம்மையால் தன் 5-வது வயதில் பார்வையை இழந்தார். விருது வழங்கும்போது குடியரசுத் தலைவர் பிரணாப் மேடையிலிருந்து கீழே இறங்கி, கவுலின் இருக்கைக்கே சென்று விருதை வழங்கினார்.