சென்னை: ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘ஜப்பான்’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இதில்கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். சுனில், வாகை சந்திரசேகர், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், விஜய் மில்டன், மலையாள நடிகர் சணல் அமன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வரும் 28-ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதுபற்றி தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு கூறியதாவது:
கார்த்தியின் திரைப் பயணத்தில் ‘ஜப்பான்’25-வது படம் என்பதால் அதைக் கொண்டாடும் விதமாக ‘கார்த்தி 25’ என்கிற பெயரில்இதை நிகழ்ச்சியாக நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த விழாவில் கடந்த 20 வருடங்களாக கார்த்தியுடன் இணைந்து பயணித்த, தயாரிப்பாளர்கள், நட்சத்திரங்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம்.
கார்த்தி சினிமாவில் நுழைந்து 20 வருடம் ஆகிவிட்டது. ஆனாலும் படங்களைத் தேர்வு செய்து நடித்து வருவதால் இப்போதுதான் 25-வது படத்தைத் தொட்டுள்ளார். அவற்றில் 17 படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றவை.அதில் குறிப்பிடத்தக்க 5 படங்களை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது என்பதில் பெருமை. ‘ஜப்பான்’, ஆக் ஷன் த்ரில்லர் பாணியில் நையாண்டி கலந்த காமெடியாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் கார்த்தி ஒரு பாடலை தமிழ், தெலுங்கில் பாடியுள்ளார்.
அடுத்த வருடம் நாங்கள் தயாரிக்கும் பெரிய படங்களில் ஒன்றாக எங்களது ‘கைதி 2’ இருக்கும். இதுதவிர வேறு கதைகளும் பேசிக்கொண்டு இருக்கிறோம். இவ்வாறு எஸ்.ஆர். பிரபு கூறினார்