அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், பசுபதி, திஷா பதானி உட்பட பலர் நடிக்கும் படம், ‘கல்கி 2829 ஏ.டி’. நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தை வைஜயந்தி மூவிஸ் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் தலைப்பு, அமெரிக்காவின் சான் டியாகோவில் நடைபெற்ற காமிக் கான் நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றதும் பிரமித்துவிட்டேன் என்றும் பொறாமைப்பட்டேன் என்றும் நடிகர் ராணா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “இது புராணம் மற்றும் அறிவியல் புனைகதைகளை கலக்கும் அற்புதமானப் படம். நான் இந்தப் படத்தின் அரங்கத்துக்குள் நுழைந்தபோது, கனவில் கண்டதை எல்லாம் நனவில் பார்ப்போது போல இருந்தது. நாக் அஸ்வினிடம் அன்று பேசவே இல்லை.
பிறகு வீட்டுக்குவந்ததும், “உண்மையில் நான் பொறாமைப்படுகிறேன். ஏன் என்று தெரியவில்லை” என மெசேஜ் அனுப்பினேன். அவர், “நீ பொறாமைப்பட்டால் நான் சரியானதைத்தான் செய்கிறேன்” என்று பதில் அனுப்பினார். இந்தப் படத்தை ஆவலாக எதிர்பார்க்கிறேன். இந்தப் படம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்கவும் ஆவலாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.